Published : 25 Jun 2018 09:44 PM
Last Updated : 25 Jun 2018 09:44 PM

புதிய புல்லட், பல்சர் வாகனங்களை குறிவைத்து திருடிய இளைஞர்கள் 4 பேர் கைது: 23 புதிய வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருக்கும் புதிய புல்லட், பல்சர் வாகனங்கள் அடிக்கடி திருடு போனதை அடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் நான்கு இளைஞர்கள் சிக்கினர். முக்கிய நபர் தலைமறைவாகிவிட்டார்.

எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் புதிய மோட்டார் சைக்கிள்கள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்னை, எம்.ஜி.ஆர் நகர், அண்ணா பிரதான சாலையில் டீக்கடை நடத்திவரும் குருராமச்சந்திரன்(37) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் அவசரமாக பணம் தேவைப்படுகிறது இந்த மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பணம் கொடுங்கள் என்று கேட்க சந்தேகமடைந்த குருராமச்சந்திரன் பணம் இல்லை என்று மறுத்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் குரு ராம்ச்சந்திரனை மிரட்டி அவரிடமிருந்து பணம் ரூ.1000 மற்றும் 1 செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்த மோட்டார் சைக்கிள் வாலிபர் குறித்த தகவல் கிடைத்தது.

மேலும் எம்.ஜி.ஆர். நகர் பிள்ளையார் கோவில் தெருவில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடு போக அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் இருந்த நபர் மோட்டார் சைக்கிள் திருடன் விஜயகுமார் என்பது தெரியவந்தது. உடன் இன்னொரு நபர் அசோக் எனபது தெரியவந்தது. இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களை திருடிச்செல்வது தெரியவந்தது.

விஜயகுமார் தலைமறைவாக இருந்த நிலையில் அஷோக்கை போலீஸார் கைது செய்தனர். அசோக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறிய தகவல் போலீஸாரை அதிர வைத்தது. புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள், பல்சர் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே திருடியது தெரியவந்தது.

சென்னை குன்றத்தூரில் தங்கள் கூட்டாளிகள் அரியலூரை சேர்ந்த விஜயகுமார், சுஷ்வின், கடலூரை சேர்ந்த ராஜ்மோகன், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த மணவாளன் ஆகியோருடன் சேர்ந்து புது புல்லட் மோட்டார் சைக்கிள்கள், 220 சிசி பல்சர் வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருடுவது தெரிய வந்தது.

இவர்கள் கிண்டி, பரங்கிமலை, எம்.ஜி.ஆர். நகர், சேலையூர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடியுள்ளனர். அதிலும், பழைய இருசக்கர வாகனங்களை கண்டுகொள்ளாத இவர்கள், புதிதாக வாங்கப்படும் ராயல் என்பீல்டு, பல்சர் போன்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியுள்ளனர்.

திருடிய வாகனங்களை அரியலூருக்கு ஓட்டிச்சென்று அங்கிருந்து விற்பனை செய்துள்ளனர். சில மோட்டார் சைக்கிள்களை சொந்தக்காரர்களுக்கு இலவசமாகவே கொடுத்துள்ளனர். அஷோக், மணவாளன், ராஜ்மோகன், சுஷ்வின் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 23 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான விஜயகுமார் பிடிபட்டால் 25 மோட்டார் சைக்கிளுக்கு மேல் சிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x