Published : 25 Jun 2018 05:09 PM
Last Updated : 25 Jun 2018 05:09 PM

விதிகளை மீறி ஆளுங்கட்சியினர் வைத்த பேனர்: என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?- அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கேள்வி

சாந்தோம் நெடுஞ்சாலையில் ஆளுங்கட்சியினர் வைத்துள்ள பேனர்களால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவதை நேரில் கண்ட தலைமை நீதிபதி வேதனைப்பட்டார், விதிமீறல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது. சாலை ஓரங்களிலும், நடைபாதைகளை மறித்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், சாலையை நோக்கி வேண்டுமானால் வைக்கலாம் என்றும், அதுவும் குறைந்தபட்சம் 7 அடி உயரத்திற்கு மேலேதான் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்னை உயர் நீதிமன்றம் வந்தபோது சாலையோரங்களில் பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அதிமுகவினர் டிஜிட்டல் பேனர் வைத்திருப்பதை நேரில் பார்த்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிமன்றம் தொடங்கியவுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணை அழைத்த தலைமை நீதிபதி, இன்று தாம் வரும் வழியில், சென்னை சாந்தோம் பகுதியில் ஆளுங்கட்சியினர் சாலையை ஆக்கிரமித்து பேனர்கள் வைத்திருந்ததாக குறிப்பிட்டார். விதிகளுக்கு மாறாக பேனர்கள் வைக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, இதற்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதைகளை மறித்தும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேட்டார்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், மாநகராட்சிக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x