Published : 25 Jun 2018 02:03 PM
Last Updated : 25 Jun 2018 02:03 PM

தமிழிசையைத் தாக்க முயற்சி; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைத் தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மேடையேறிய இளைஞர் ஒருவர் அவரைத் தாக்க முயற்சி செய்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த அசம்பாவிதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது காவல்துறை தொடர் கண்காணிப்புடன் இருந்திருக்க வேண்டும். பொதுவாக ஆளும் ஆட்சியாளர்கள் அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும் அரசின் அனுமதி பெற்று நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர் எவரேனும் மது அருந்தியிருப்பது தெரியவந்தால் அவரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய கட்டாய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

எனவே தமிழக பாஜக தலைவரை தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவத்தை தமாகா சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தமிழக காவல்துறை அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x