Published : 25 Jun 2018 10:46 AM
Last Updated : 25 Jun 2018 10:46 AM

ஸ்டாலின் கைது சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கை; விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் ஆய்வு செய்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கை. விதிகளுக்குட்பட்டே ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நடுக்குப்பத்தில் இன்று (திங்கள்கிழமை) மீனவர்களுக்கான நிரந்தர மீன் அங்காடியைத் திறந்து வைத்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“ஒரு கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. இங்கு 112 பேர் அமர்ந்து வியாபாரம் செய்யலாம். சுகாதார முறையில் மீன் வியாபாரம் செய்யலாம். அனைத்து வசதிகளும் இங்கு உண்டு.

நடுக்குப்பத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமான மீன் அங்காடி குறித்து ஊர் மக்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் மீன்கள் சுகாதார முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய மீன்வள மேம்பாட்டுத் துறையுடன் மாநில அரசின் பங்கையும் சேர்த்து நகராட்சி, மாநகராட்சி என மொத்தம் 19 இடங்களில் இதேபோன்ற மீன் அங்காடிகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை பயன்பாட்டுக்கு வரும்போது மக்களுக்கு சுகாதாரமான முறையில் மீன்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தால் தண்டனை என ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. இதையடுத்து, ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என திமுக கூறியிருக்கிறதே?

சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் ஆய்வை எப்படி சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூற முடியும்? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆளுநர் ஆய்வு செய்வதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது. ஆளுநரை தன் கடமையை செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு தண்டனை என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் நடந்தால் ஜனநாயக முறையில் ஏற்றுக் கொள்ளலாம். சட்டத்திற்கு அப்பாற்பட்டு போராட்டங்கள் நடந்தால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனும் நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதில் அரசாங்கத்தின் பங்கு ஒன்றும் கிடையாது.

நான் உட்பட பல அமைச்சர்கள் திமுக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக சிறை சென்றிருக்கிறோம். சென்னை, கடலூர், திருச்சி என நாங்கள் பார்க்காத சிறையே கிடையாது. சிறைக்கு அஞ்சாதவர்கள் நாங்கள். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கை. விதிகளுக்குட்பட்டே ஆளுநர் ஆய்வு செய்கிறார்.

காவல்துறை அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியிருக்கிறாரே?

சமூக விரோதிகளுக்கு காவல் துறை விரோதி. காவல் துறை அவர்களின் பணியை சரியாகச் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x