Published : 25 Jun 2018 08:55 AM
Last Updated : 25 Jun 2018 08:55 AM

ஸ்ரீரங்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

“ஸ்ரீரங்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் முயற்சியாலும், பிரதமர் மோடியின் நடவடிக்கையாலும் வந்தது. ஆனால் அதற்கு இப்போது பலர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையால் 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவர்.

கடவுளே இல்லை என்று கூறிய தந்தை பெரியார்கூட குன்றக்குடி அடிகளார் அணிவித்த திருநீறை அழிக்கவில்லை. அதுதான் பண்பாடு. தெய்வ நம்பிக்கை அற்றவருக்கும் இருந்த நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. எனவே அவரை கோயில், வழிபாட்டு தலங்களில் அனுமதிக்க கூடாது. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு பரிகார பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வாசல் வழியாக சென்ற அவருக்கு ரங்கநாதருக்கு சார்த்தப்பட்ட மாலை சூட்டப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு நெற்றியில் இடப்பட்ட பிரசாதம் அழிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகம விதிகள் மீறப்படவில்லை எனக் கூறுவது தவறு.

சேலம் 8 வழிச்சாலை தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவே கொண்டுவரப்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும். கலவரம் எதுவுமின்றி வர்த்தக துறைமுகத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x