Published : 25 Jun 2018 07:58 AM
Last Updated : 25 Jun 2018 07:58 AM

வழக்கறிஞர்களின் வாதங்களை பொறுத்தே தீர்ப்பு அமைகிறது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

நீதித்துறை சரியாக செயல்பட நீதிபதிகள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பிரபலமான வழக்குகளின் தீர்ப்பின் தன்மையானது, வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கும் தரமான வாதங்களைப் பொறுத்தே அமைகிறது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான குடியிருப்புகளை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது:

நீதிமன்ற பணிகளில் ஈடுபடு வோர் காலத்துக்கு ஏற்ப மாறலாம். ஆனால், நீதித்துறை சுதந்திரமாகவும், சார்புத்தன்மை இல்லாமலும் அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும். நூற்றாண்டுகளானாலும் இது தொடர வேண்டும். சிறப்பாக பணியாற்றிய நீதிபதிகள், முக்கிய வழக்குகளில் நடந்த வாதங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கான இடத்தை தேர்வு செய்து அறிக்கை அளித்தால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை பார் கவுன்சிலைச் சேர்ந்த 700 பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டம் குறித்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக நீதிமன்றங்களில் 5 ஆண்டுகளைக் கடந்தும் தீர்வு காணப்படாத வழக்குகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியவில்லை. மிக விரைவில் இந்த இலக்கை அடைய உங்கள் அனைவரின் உதவியும் வேண் டும். நீதித்துறை சரியாக செயல்பட நீதிபதிகள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது.

பிரபலமான வழக்குகளின் தீர்ப்பின் தன்மையானது, வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கும் தரமான வாதங்களைப் பொறுத்தே அமைகிறது. எனவே,வழக்கறிஞர்கள் முழு தயாரிப்புடன் வந்து வாதிட வேண்டும். தேவையற்ற காலதாமதத்துக்கு காரணமாகி விடக்கூடாது.

சட்டப்பணிகள் ஆணையம் மூலம் செயல்படுத்தப்படும் சட்ட உதவி மையங்கள் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும்.

பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிகழ்வுகள், இரு பிரிவினரிடையே மோதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சட்டப்பார்வையுடன் நீதிமன்றங்கள் அதனை அணுக வேண்டும்.

உடல் ஊனமுற்றோர், பேரிட ரால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு தங்களுக்கு உதவும் திட்டங்கள் குறித்து தெரிவதில்லை. அவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணையம் தேவையான வழிகாட்டுதலை வழங்கி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வழக்குகளுக்கு தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும், வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதன் மூலம், தீர்ப்பில் தரத்தைக் குறைத்து விடக்கூடாது.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும்போது, வழக்குகள் தாமதமாவதால் வழக்கில் தொடர்புடையோர் மட்டுமல்லாது, இதனையே வாழ்வாதாரமாகக் கொண்ட வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். வழக்கறிஞர்களின் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்டு தீர்வு காண நீதிபதிகளான நாங்கள் அனைவரும் எப்போதும் தயாராக உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x