Published : 25 Jun 2018 07:51 AM
Last Updated : 25 Jun 2018 07:51 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,428 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,299 கனஅடியில் இருந்து நேற்று 18,428 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் இரண்டரை அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1,299 கனஅடியாகவும், நீர் இருப்பு 18.24 டிஎம்சி-யாகவும், நீர்மட்டம் 50.68 அடியாகவும் இருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து கபினி அணையில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

ஒரேநாளில் இரண்டரை அடி

கபினியில் திறக்கப்பட்ட நீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால், நீர்வரத்து விநாடிக்கு 1,299 கனஅடியில் இருந்து 18,428 கனஅடியாக உயர்ந்தது. இதனால், நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடிக்கு மேல் உயர்ந்து 53.04 அடியானது. நீர் இருப்பு 19.78 டிஎம்சி-யாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதனால் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

மாலையில் குறைந்த நீர்வரத்து

இந்நிலையில், நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலையில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி என்ற நிலையை எட்டியது. இதையடுத்து, அருவி மற்றும் ஆற்றில் குளிப்பதற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. எனினும், பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, நீர்வரத்தின் அளவு நேற்று காலையில் இருந்ததை விட மாலையில் சற்றே குறைந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x