Last Updated : 25 Jun, 2018 07:48 AM

 

Published : 25 Jun 2018 07:48 AM
Last Updated : 25 Jun 2018 07:48 AM

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நிலங்களை குத்தகைக்கு தரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம்: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிமுகம்

சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான பிளாண்ட் அமைக்க, தரிசு நிலங்களை குத்தகைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்த உள்ளது.

சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகளவு ஊக்கப்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அந்த வரிசையில் தமிழக அரசும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றில் சோலார் பிளாண்ட் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சூரிய ஒளி மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 1,747 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கான ஆலைகள் தமிழகத்தில் உள்ளன. இந்த ஆண்டுக்குள் 700 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலைகள் நிறுவப்பட உள்ளன. இதைத் தவிர, 1,500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2021-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிப்பதற்காக பிளாண்ட்டுகள் அமைக்க விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்கு இடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், தர்மபுரி, விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வறட்சி காரணமாக விவசாயிகள் தரிசாகப் போட்டிருக்கும் நிலத்தில், அவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் குத்தகைக் கட்டணமாக வழங்கப்படும். ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே ஒரு விவசாயி வைத்திருந்தால் அவர் அருகில் உள்ள மற்ற விவசாயிகளையும் குழுவாக சேர்த்து எங்களுக்கு நிலம் வழங்கலாம். எந்த விவசாயிடமும் அரசு வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்காது. விவசாயிகளே விருப்பப்பட்டு தரும் நிலத்தில்தான் இந்த சோலார் பிளாண்ட் அமைக்கப்படும்.

நிலத்தில் சோலார் பிளாண்ட் அமைத்து அதில் மின்னுற்பத்தி செய்து அரசுக்கு விற்பனை செய்வது வரையிலான அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும். குத்தகை காலம் 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை இருக்கும். அதன் பிறகு, அந்த நிலம் அதன் உரிமையாளரான விவசாயிக்கே திரும்ப வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள் தங்களது நிலத்தின் மீதான உரிமையை இழக்கமாட்டார்கள். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 044-28224830 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x