Published : 25 Jun 2018 07:33 AM
Last Updated : 25 Jun 2018 07:33 AM

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை 10 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது.

துறை வாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மே 29-ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்த திமுக, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டது. 4 நாட்கள் புறக்கணிப்புக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி முதல் பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்று வருகிறது.

இதுவரை சட்டப்பேரவைக் கூட் டம் நடந்த 13 நாட்களில் வனம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை, மீன் வளம், பால் வளம், கால்நடை பராமரிப்பு, உள்ளாட்சி, சிறப்பு திட்ட செயலாக்கம், சட்டம், நீதி, சிறைச்சாலைகள், சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், ஜவுளி, கதர் கிராமத் தொழில்கள், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர் நலன், விளையாட்டு, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். அதில், 2019 ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ் டிக் பொருட்களின் உற்பத்தி, பயன்பாட்டுக்கு தடை, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பெண்களுக்கு 50 இலவச நாட்டுக்கோழிகள் வழங் கும் திட்டம் போன்ற அறிவிப்புகளும் அடங்கும்.

இந்நிலையில், பேரவைக்கு கடந்த 15-ம் தேதி முதல் 24-ம் தேதி (நேற்று) வரை 10 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர் நடக்க உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு கேள்வி - பதில் நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும். அதன்பிறகு நேரமில்லா நேரத்தில் முக்கியப் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வருவார்கள். அதனைத் தொடர்ந்து செய்தி, விளம்பரம், எழுதுபொருள், அச்சு, சுற்றுலா, கலை, பண்பாடு ஆகிய துறைகளின் கொள்கை விளக்க குறிப்புகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது விவாதம் நடக்கும். செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடரா ஜன் ஆகியோர் விவாதத்துக்கு பதிலளித்து பேசுகின்றனர். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.

நாமக்கல்லில் ஆளுநருக்கு எதி ராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டது, சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு, அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் கைது உள்ளிட்ட பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x