Published : 23 Jun 2018 10:33 PM
Last Updated : 23 Jun 2018 10:33 PM

அண்ணா சாலையில் போட்டி போட்டு சாகசம்: சாலைத்தடுப்பில் பைக் மோதி இளைஞர் பலி, நண்பர் படுகாயம்

அண்ணா சாலை பரபரப்பு மிகுந்த சாலையாகும். சென்னையில் சமீப காலமாக இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பைக் ரேஸ் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிளை பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர், அல்லது மற்றவர்கள் இவர்களால் விபத்தில் சிக்குகின்றனர். சமீப காலமாக அதிகரித்து வரும் இத்தகைய பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை, வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை போலீஸார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆனாலும் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டும் இளைஞர்கள் தங்கள் செயலை நிறுத்துவதில்லை, இன்று மாலை சென்னை ஜெமினியிலிருந்து ஸ்பென்சர் நோக்கி மூன்று அதிவேக மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் வேகமாக ஒருவரை ஒருவர் போட்டி போட்டு சென்றுள்ளனர்.

வாகனங்களிடையே ஒருவரை ஒருவர் ஜிக்ஜாக் முறையில் முந்திச்செல்ல ஸ்பென்சர் அருகே சென்றபோது பல்சர் மோட்டார் சைக்கிளும் ட்யூக் மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் டியூக் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் நேராக சாலை தடுப்பில் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த தேனாம்பேட்டை பர்வா நகரையை சேர்ந்த பெரிய சாமி என்பவரின் மகன் விக்ரம்(17) ரத்த வெள்ளத்தில் பலியானார். இவர் சூளைமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் டிஎம்ஈ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

விக்ரம் பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் ஆரிஷ் தப்பி ஓடிவிட்டார். இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். பல்சர் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யோகேஷ்வரன்(17) தூக்கி வீசப்பட்டார். பல்சர் வாகனத்தை ஓட்டி வந்த முகேஷ் தப்பி ஓடிவிட்டார். முகேஷ், ஆரிஷ் இருவரையும் போலீஸார் 279 304(A) ,338 ipc q34 A&B r/w 187 mv act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பல்சர் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த யோகேஷ்வரன்(17) ஆம்புலன்ஸ் மூலம் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து நெரிசல் மிக்க மாலை நேரத்தில் நடந்ததால் பொதுமக்கள் கூடிவிட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x