Published : 23 Jun 2018 03:35 PM
Last Updated : 23 Jun 2018 03:35 PM

சேலம் உட்பட 4 மாவட்டங்களில் விமான சேவை விரைவாகத் தேவை: அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதல்வர் கடிதம்

ஓசூர் விமான நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும், நெய்வேலிக்கு விமான சேவைகளை இயக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் மண்டல அளவில் உடான் திட்டம் மூலம் விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் விமான நிலைய சேவை மூலம் அம்மாவட்டம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் பயன்பெறுவதோடு அதனை வரவேற்கவும் செய்துள்ளனர்.

அதேபோல், முக்கிய தொழில்துறை மையமாக உள்ள ஓசூரில் உடான் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக விமானங்கள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தடையில்லாச் சான்று பெறப்பட்டவுடன் ஓசூரில் விமானங்கள் இயக்கப்படும்.

ஓசூர் விமான நிலையம் மூலம் தொழில் மையமான கிருஷ்ணகிரி, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், சென்னை-பெங்களூரு தொழில் மையம் பகுதியும் வளர்ச்சியை நோக்கி மேம்படும். அதனால், ஓசூர் விமான நிலையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர விமானப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல், உடான் திட்டத்தின்கீழ் நெய்வேலியும் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலியிலும் விமானப் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடான் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் முக்கியமான ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் ராமநாதபுரத்திற்கு வருகை தருவர். அதனால், ராமநாதபுரத்திலும் விமான சேவையை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x