Published : 23 Jun 2018 01:05 PM
Last Updated : 23 Jun 2018 01:05 PM

சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டம்; திருவண்ணாமலையில் வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வரும் 25 ஆம் தேதி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை- சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.

எங்களைக் கொன்றுவிட்டு எங்களின் பிணங்கள் மீது விளை நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கண்ணீரும்கம்பலையுமாக தாய்மார்கள் போராடுவது நெஞ்சை பதற வைக்கும் துயரக் காட்சிகளாக இருக்கின்றன. ஆனால் அதிமுக அரசோ மக்களின் பாதிப்பு பற்றி கவலைப்படவோ மக்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவோ முனைப்புக் காட்டாமல் காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திட்டத்தையோ அல்லது இருக்கின்ற சாலையை அகலப்படுத்தும் திட்டத்தையோ யோசிக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஆங்காங்கே உள்ள மக்கள் தங்களுக்கு காவல்துறையினரால் விடுக்கப்படும் அச்சறுத்தல்களையும் மிரட்டல்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். காவல்துறையின் அடக்குமுறையையும் விவரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பசுமை விரைவு சாலை திட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், விளைநிலங்கள், பசுமையான மலைகள், நீர் ஆதாரங்கள் போன்றவற்றிற்கு ஏற்படும் கடும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியில் முழு வீச்சில் போராட்டம் நடத்திட திமுக முடிவு செய்து, ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு தலைமையில், வருகின்ற 25 ஆம் தேதி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x