Published : 23 Jun 2018 01:01 PM
Last Updated : 23 Jun 2018 01:01 PM

ஸ்டாலின் கைது; திமுகவினர் சிறையிலடைப்பு: அடக்குமுறை வென்றதில்லை- முத்தரசன் கண்டனம்

  நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டதையும், ஆளுநருக்கு எதிராக ராஜ்பவனை முற்றுகையிடச் சென்ற ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டித்துள்ளார்.

இது குறித்து முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் ஏற்பட்டுள்ள பலவீனத்தால் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரங்களைத் தொடர்ந்து பறித்து வருகிறது, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி நடைபெறும் சூழலில் ஆளுநர், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, அவர்களுக்கு உத்தரவிடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவையும் மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி அரசு தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

இந்த நிலையில், ஆளுநரின் ஜனநாயக அத்துமீறலை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நாமக்கல்லுக்குச் சென்ற ஆளுநருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் கலந்து கொண்ட 192 திமுகவினர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சென்ற ஆயிரக்கணக்கனோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மைக்காலமாக தமிழக அரசு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகவும், கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் கடுமையான அடக்குமுறை தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் வரலாற்றில் எப்போதும் வென்றதில்லை. எடப்பாடி பழனிசாமி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராடுவது அவசியம்.

நாமக்கல்லில் கைது செய்யப்பட்டோர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x