Published : 23 Jun 2018 12:51 PM
Last Updated : 23 Jun 2018 12:51 PM

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி; திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ்பபவனை முற்றுகையிட்ட ஸ்டாலின் கைது

 நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு நடத்தியதைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, ராஜ்பபவனை முற்றுகையிடச் சென்ற மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ஆளுநர் எங்கெல்லாம் ஆய்வுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது.

தமிழகத்தில் பல இடங்களில் ஆளுநருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஆய்வு நடத்த வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட திமுகவினர் மாலையில் விடுவிக்கப்படாமல் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கோஷமிட்டபடி பேரணியாகச் சென்றனர்.

பேரணியாகட் சென்ற திமுகவினரை கிண்டியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர், போலீஸாரின் தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் திமுகவினர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ''ஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியே இந்த திடீர் போராட்டம். திமுகவினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சவில்லை. எங்களை தற்போது கைது செய்து மாலையில் விடுவித்தால் மீண்டும் அடுத்தடுத்தும் போராடுவோம்'' என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிடுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x