Published : 23 Jun 2018 10:15 AM
Last Updated : 23 Jun 2018 10:15 AM

தமிழகத்தில் அரிசி உற்பத்தி குறித்த மாநில அரசு அளித்துள்ள புள்ளிவிவரமே உண்மையானது: மு.க.ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு விளக்கம்

அரிசி உற்பத்தி தொடர்பாக மாநில அரசின் புள்ளிவிவரங்களே உண்மைத்தன்மை கொண்டது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆங்கில நாளிதழில் ஜூன் 21-ல் வெளியான செய்தி அடிப்படையில், அரிசி உற்பத்தியில் தமிழக அரசு முரண்பாடான தகவல்களை வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரிசி உற்பத்தி குறித்த ரிசர்வ் வங்கி, தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் இடையில் வேறுபாடு உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 2012-13 வரை மாநில அரசால் வழங்கப்பட்ட உற்பத்தி விவரங்கள் மாறுபாடின்றி மத்திய அரசால் ஏற்கப்பட்டது. 2013-14-ம் ஆண்டிலிருந்து புதிய கணக்கீட்டு வழிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்பிறகே மாநில அரசின் கணக்கீட்டுக்கும், மத்திய அரசின் கணக்கீட்டுக்கும், மாறுபாடு ஏற்பட்டு வருகிறது.

எனவே, அரிசி மகசூலைப் பொறுத்தவரை புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படுவதால், மாநில அரசு அளிக்கும் புள்ளி விவரமே உண்மைத்தன்மை கொண்டது. மத்திய வேளாண் துறையின் புள்ளிவிவர அடிப்படையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையை கொண்டு ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல.

தமிழக அரசு கடந்த 2011 முதல் தடையில்லா மும்முனை மின்சாரம், 2012- முதல் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை வழங்கியதால் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. இதனால்தான் 2011-க்குப் பின்னர் 4 முறை கிருஷி கர்மான் விருது கிடைத்துள்ளது. எனவே, அதிக அளவிலான உற்பத்தியை காண்பித்து மக்களை திசைதிருப்ப வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x