Published : 23 Jun 2018 10:14 AM
Last Updated : 23 Jun 2018 10:14 AM

கடவுள் மறுப்புக்கும் நாத்திகத்துக்கும் வழி இருப்பதால் இந்து மதத்தை கொண்டாடுகிறேன்: எழுத்தாளர் சங்க மாநாட்டில் வைரமுத்து உரை

இந்து மதத்தை நான் கொண்டாடுகிறேன். அதில் ஓர் சவுகரியம் உள்ளது. கடவுள் மறுப்புக்கும், நாத்திகத்துக்கும் வழி இந்து மதத்தில் உண்டு என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பேசிய கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

புதுச்சேரியில் நேற்று இரவு நடந்த கருத்துரிமைக் கருத்தரங்கில் வைரமுத்து பேசியதாவது:

தமிழனுக்கு கருத்துரிமை என்பது பிறப்புரிமை. ஆண்டவனை எதிர்த்து கேட்டவர்கள், அரசாங்கத்தை கேட்க மாட்டார்களா. நமது பண்பாடு, கருத்து, ஆராய்ச்சி என அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று விஷயங்களால் அனைத்து ஜீவராசிகளையும் மனிதன் முந்துகிறான். இவ்வுலகானது புழு, பூச்சி, விலங்கு, தாவரங்களுக்கு சொந்தம். கடைசி ஜீவராசியே மனிதன்.

இந்து மதத்தை நான் கொண்டாடுகிறேன். அதில் ஓர் சவுகரியம் உள்ளது. கடவுள் மறுப்புக்கும் நாத்திகத்துக்கும் வழி இந்து மதத்தில் உண்டு. பிரிட்டிஷ் கால கருத்துரிமை இப்போது இருக்கிறதா, பாரதிக்கு அப்போது இருந்த கருத்து சுதந்திரம், தற்போது வைரமுத்துவுக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதாக பாரதி எழுதினார். தற்போது இந்திய செல்வம் கறுப்பு பணமாக வெளிநாடுகளில் உள்ளது. சங்க இலக்கியப் பாடலை கறுப்பு பணத்துக்கு எதிராக பாடி, அதற்கு தடை விதித் தால் என்ன சொல்வது, அறிவை சமூகத்துக்கு கடத்துங்கள் என்பதே எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் தகவல்.

வேண்டாதவையான மதவாதம், ஏழ்மை, அறியாமை ஆகியவை மூடியுள்ளன. அவற்றை அகற்றும் சமூக சிற்பியாக வேண்டும். தானாக அனைத்தும் மாறும் என்பது பழைய பொய் என்பதை உணர வேண்டும். கருத்துக்கு பதில் ஆயுதமல்ல. கருத்தால் எதிர்கொள்வது ஜனநாயகத்தின் உச்சம். அதுவே மேன்மையாகும். கருத்துரிமையை தடுத்தால் அது இரண்டு மடங்கு வீரியமடையும். சகிப்புதன்மை இல்லாத தேசத்தில் வளர்ச்சியில்லை என்று தெரிவித்தார்.

மேலும் இந்த கருத்தரங்கில்முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். அருணன் தலைமை தாங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x