Published : 23 Jun 2018 09:57 AM
Last Updated : 23 Jun 2018 09:57 AM

சென்னை - சேலம் பசுமைவழி சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சேலத்தில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்: செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விவசாய நிலங்கள், நீராதாரங்கள், மலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைத் திட்டத்துக்கு எதிராக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளைநிலங்கள் பறிபோவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கள் பிணங்கள் மீது நடந்து சென்று நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என கண்ணீருடன் ஆவேசமாகப் போராடி வருகின்றனர்.

ஆனால், இதுபற்றி சிறிதும் கவலைப்படாத அதிமுக அரசு, காவல் துறை துணையுடன் நில அளவை செய்து, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்கிறது. இது விவசாயிகள் இடையே ஆத்திரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 8 வழிச் சாலையால் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். 500 ஏக்கர் வனம், 8 மலைகளை அழிக்க வேண்டியிருக்கும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களது கவலைகளையும், கருத்துகளையும் பொறுமையாகக் கேட்காமல், எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என முதல்வர் பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும், அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை.

நீர் ஆதாரங்கள் குறைந்துவரும் நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான கிணறுகள், 100-க்கும் அதிகமான ஏரி, குளம், குட்டைகள் அழிக்கப்படும் என்ற செய்தியை மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும் புறந்தள்ளாது.

இத்திட்டத்தை எதிர்த்துப் பேசுபவர்களை கைது செய்வதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்துக்குரியது. 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம் என்பதை முதல்வர் உணர வேண்டும். சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது மக்களின் வீரியத்தை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். விவசாய நிலங்கள், நீராதாரங்கள், பசுமை நிறைந்த மலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது தற்போது உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்த வேண்டும். இதற்கான திட்டத்தை தயாரிக்க உடனடியாக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி திமுக சார்பில் சேலத்தில் 23-ம் தேதி (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. விளைநிலங்களை அத்துமீறி பறிக்க முயன்றால் அதை எதிர்த்து திமுக அறவழியில் தொடர்ந்து போராடும். இது ஜனநாயக நாடு. எனவே, மக்கள் ஒத்துழைப்பின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடன் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதை முதல்வர் உணர வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x