Published : 23 Jun 2018 09:54 AM
Last Updated : 23 Jun 2018 09:54 AM

மாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

பள்ளிப்பட்டு அருகே மாணவர் கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளிகரம் கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பகவான், நட்புடன் பழகி, ஆங்கில பாடத்தை எளிமையாக கற்பித்து, மாணவ-மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக இருந்தார்.

இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த மாணவ - மாணவிகள் கடந்த 19-ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு கடந்த 20-ம் தேதி பணி விடுவிப்பு ஆணையை பெற வந்த ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் கதறி அழுதனர். இந்த செய்தி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியாகி தமிழக மக்களின் கவனத்தை கவர்ந்தது.

இதனால், ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, வெளிகரம் பள்ளியிலேயே தன் பணியை ஆசிரியர் பகவான் தொடர்ந்து வருகிறார்.

அதிகாரி விசாரணை

இந்நிலையில் நேற்று வெளிகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் விசாரணை மேற்கொண்டார். தலைமையாசிரியர் அரவிந்த் மற்றும் 19 ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் பெறப்பட்ட விவரங்கள் யாவும் அறிக்கையாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அளிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பள்ளியில், கற்பித்தல் பணியில் எவ்வித இடையூறும் நிகழாமல் இருக்க வேண்டும். அமைதியான சூழல் தொடர்ந்து நிலவ வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் அனைவரும் எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

திரைப்பட வாய்ப்பு

ஆசிரியர் பகவான் குறித்த செய்தியால் கவரப்பட்ட சென்னையைச் சேர்ந்த 2 திரைப்பட இயக்குநர்கள் நேற்று வெளிகரம் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் பகவானை சந்தித்து விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, வெளிகரம் பள்ளி மாணவர்களின் பாசப் போராட்டம் திரைப்படமாக உருமாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரை சந்திக்க முடிவு

ஆசிரியர் பகவானின் பணியிடமாறுதல் உத்தரவு தொடர்பாக வெளிகரம் கிராம மக்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரை நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளிகரம் பள்ளியிலேயே ஆசிரியர் பகவான் தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது.

ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

வெளிகரம் அரசுப் பள்ளி மாணவர்களின் பாசப் போராட்டம் குறித்து, அறிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘ குரு- சிஷ்யாஸ்’ என குறிப்பிட்டு, பகவானுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே போல், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் ட்விட்டர் செய்தியில், மாணவர்களின் பாசப் போராட்டக் காட்சிகள் குறித்து, சிலாகித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x