Published : 23 Jun 2018 09:49 AM
Last Updated : 23 Jun 2018 09:49 AM

பட்டரைப்பெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்கள் 3 லட்சம் ஆண்டுக்கு முந்தியவை: தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

பட்டரைப்பெரும்புதூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தியவை எனத் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கற்கால வரலாற்றுக்குச் சான்றளிக்கக் கூடிய முதன்மை மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. பட்டரைப்பெரும்புதூரில் ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் 300 ச.மீ. பரப்பளவில் தமிழக தொல்லியல் துறை கடந்த 2015-16-ம் ஆண்டு முதல்கட்ட அகழாய்வினை நடத்தியது.

2-வது கட்டமாக 2017-18ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணி இருளந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், 2 ஏக்கர் பரப்பளவில் 11 குழிகளில் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த அகழாய்வுப் பணியை நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, தொல்லியல்துறை ஆணையர் நாகராஜ், அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வின்போது, அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரிலும், சிவகங்கை மாவட்டம் கீழடியிலும் நடந்து வரும் அகழாய்வுப் பணிகள் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. ‘நேச்சர்’ என்கிற உலகளாவிய பத்திரிகையில் முதல் மனிதன் வாழ்ந்த இடம் திருவள்ளூர் மாவட்டம், அதிரம்பாக்கம் பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் மனிதன், அதிரம்பாக்கம் பகுதியில் வாழ்ந்திருப்பது என்பது விஞ்ஞானிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதலோடு பட்டரைப்பெரும்புதூரில் தற் போது நடந்து வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 351 பழங் கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில், கல் ஆயுதங்கள், செம்பு, இரும்பு, கண்ணாடிப் பொருட்கள், சங்கு வளையல்கள், மணிகள், பானை ஓடுகள் போன்றவை உள்ளன. சில பானை ஓடுகளில் பிரம்மி எழுத்துகளும் உள்ளன.

கொசஸ்தலை ஆறு அருகிலேயே தொல்லியல்துறை சார் பில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகளில், இதுவரை கார்பன் டேட்டிங் முறையில்தான் பொருட்களின் தொன்மை (கால வரலாறு) அறியப்பட்டு வந்தது. ஆனால், இம்முறை ஒளிர்வு (ஃப்ளாரசென்ஸ்) சார்ந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை எனக் கண்டயறியப்பட்டுள்ளன. இது, ஆப்பிரிக்க கண்டத்தில்தான் மனிதர்கள் முதன் முதலாககத் தோன்றினர் என்ற நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்துள்ளது.

பட்டரைப்பெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பல்லவ மன்னன் அபராஜித வர்மன் காலத்தவை. இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர், இருளர் வாழ்வுமுறை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டு இந்த இடத்தின் தொன்மை வரலாறு உலகுக்கு அறிய செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x