Published : 23 Jun 2018 09:48 AM
Last Updated : 23 Jun 2018 09:48 AM

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சொகுசு பேருந்துகளுக்குப் பதில் விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும்: காலியாக செல்வதால் பொதுமக்கள் வலியுறுத்தல்

மாநகர போக்குவரத்துக் கழகத் தில் இயக்கப்படும் பெரும்பாலான சொகுசுப் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. எனவே, பெரும்பாலான மக்கள் பயன்பெறும் வகையில் சொகுசுப் பேருந்துகளை நீக்கி, விரைவு அல்லது சாதாரண கட்டணப் பேருந்துகளாக இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 45 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தமிழக அரசு கடந்த ஜனவரியில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை மாற்றியமைத்தது. சுமார் 50 சதவீதம் வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சமாக ரூ.24, விரைவுப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.36, சொகுசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12 எனவும், அதிகபட்ச கட்டணம் ரூ.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால், சுமார் 30 சதவீத பயணிகள் ரயில் போன்ற மாற்று போக்குவரத்துக்கு மாறிவிட்டனர். கட்டண உயர்வுக்குப் பிறகு, சாதாரண பஸ்களைவிட, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் கூட்டம் குறைவாக உள்ளது. அதிலும், சொகுசுப் பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே செல்வதாக, பொதுமக்களும், நடத்துநர்களும் புகார் தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கட்டண உயர்வு செய்த பிறகு, நாங்கள் பெரும்பாலும் சாதாரண மற்றும் விரைவுப் பேருந்து களில்தான் பயணம் செய்கிறோம். தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டும் சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய் கிறோம்.

இந்த சொகுசு பஸ்சில் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று, திரும்பி வந்தாலேயே ரூ.60 வரை செலவாகி விடுகிறது. இந்த அளவுக்கு கட்டணம் கொடுத்து பயணம் செய்வதில் எந்த வசதி யும் கிடையாது. இப்போதெல்லாம், பெரும்பாலான சொகுசு பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. எனவே, இந்த வகைப் பேருந்துகளை நீக்கிவிட்டு, சாதாரணப் பேருந்துகளை இயக்கி னால் மட்டுமே மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘பேருந்துக் கட்டண உயர்வுக்கு முன்பெல்லாம் சொகுசுப் பேருந்துகளில் அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் எப்படியும் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள்.

எரிபொருள் செலவு

ஆனால், கட்டண உயர்வுக்குப் பிறகு அலுவலக நேரங்களிலேயே 30 - 40 பேர்தான் பயணம் செய்கின்றனர். இதுவே, மதியம் நேரங்களில் 10 பேர் மட்டுமே பயணம் செய்கிறார்கள். எரிபொருள் செலவு தான் அதிகமாகிறது.

எனவே, நிர்வாகமும், மக்களும் பயன்பெறும் வகையில் சாதாரண அல்லது விரைவுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x