Published : 23 Jun 2018 09:46 AM
Last Updated : 23 Jun 2018 09:46 AM

உதய் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுமா?- நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் எதிர்பார்ப்பு

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என மின்துறை அமைச்சர் அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதற்கான நடவடிக்கைகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, ஸ்மார்ட் மீட்டர்களை உடனடியாகப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதில், 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட் வரை மின்சாரம் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. மேலும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால் மின்கட்டணம் இரு மடங்கு அதிகரிக்கும்.

இதனால், வீடுகளுக்கு மின் கணக்கெடுக்கச் செல்லும் சில ஊழியர்கள் நுகர்வோரிடம் பணம் பெற்றுக்கொண்டு மின் அளவீட்டை குறைத்து கணக்கீடு செய்கின்றனர். இதனால், மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படு கிறது. அத்துடன், மின்பயன்பாட்டைத் துல்லியமாக கணக்கெடுக்கவும் முடியவில்லை. இதன் காரணமாகவும், மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில், உதய் திட்டத்தின்கீழ், அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் என்பது மின்வாரியத்தில் உள்ள கணினி சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்வாரிய அலுவலகத்தில் இருந்த படியே ஒவ்வொரு வீட்டின் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடியும்.

அதன் விவரம் நுகர்வோருக்கு குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம், 2 மாதத்துக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தைக் கணக்கெடுக்க வீடு களுக்குச் செல்லத் தேவையில்லை. அத்துடன், கணினி மூலம் மீட்டர் கணக்கெடுக்கப்படுவதால் எவ்வித முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை.

எனவே, இந்த ஸ்மார்ட் மீட்டர் விரைவில் வீடுகளுக்குப் பொருத்தப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்கள்

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இஇஎஸ்எல் நிறுவனத்துடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x