Published : 22 Jun 2018 08:49 PM
Last Updated : 22 Jun 2018 08:49 PM

கோயம்பேடு மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள மாம்பழங்கள்: திடீர் சோதனையில் சிக்கியது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 10,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு பழுக்க வைக்கப்படுகின்றன. இயற்கையாக இவ்வகை பழங்கள் பழுக்க வைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினால், அவற்றின் எடை குறைதல், உலர்ந்து போதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும்.

பொதுவாக பழவகைகளின் பழுக்கும் திறனை மேம்படுத்த அவை திரண்ட காயாக இருக்கும் போது, அவற்றின் மீது எத்ரெல் தெளித்தல் அல்லது திரண்ட காய்களை எத்ரெலில் முக்கி எடுத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன.

சில நவீன நிறுவனங்கள் எத்திலீன் வாயுவை வணிக ரீதியாக பழங்களைப் பழுக்க வைக்க உபயோகிக்கின்றன. ஆனால், இவ்வாறு எத்திலீன் வாயு மூலம் பழங்களை பழுக்கவைக்கும் அமைப்புகளை வடிவமைக்க அதிக செலவாகும். எனவே, இவ்வடிவமைப்புகளை சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளால் நிறுவ இயலாது.

எனவே, பழ வகைகளை எளிதில் பழுக்க வைக்க, பிளாஸ்டிக் கூடாரங்களில் எத்திலீன் வாயு மூலம் திரண்ட காய்களை பழுக்கவைக்கும் எளிதான மாற்று முறை வடிவமைக்கப்பட்டது. இம்முறையில், காற்று புகாத பிளாஸ்டிக் கூடாரத்தில் எத்ரெலுடன், காரத்தன்மையுடைய பொருளினை சேர்க்கும் போது உருவாகும் எத்திலீன் வாயுவின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட காற்று புகாத கூடாரத்தினுள், பிளாஸ்டிக் கிரேடுகளில் பழுக்காத காய்கள் பழுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். காய்களின் அளவுக்கேற்ற போதுமான அளவு எத்ரெலை ஒரு பாத்திரத்தில் வைத்து கூடாரத்திற்குள் வைப்பார்கள்.

எத்திலீன் வாயு உருவாவதற்கு, எத்ரெலுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு (காரத்தன்மையுடைய பொருள்) குறிப்பிட்ட அளவு சேர்ப்பார்கள். எத்திலீன் வாயு கூடாரம் முழுவதற்கும் சீராக பரவுவதற்கு பேட்டரி மூலம் இயங்கும் ஒரு விசிறியினை கூடாரத்திற்குள் வைத்து அடைத்து விடுவார்கள். 18-24 மணி நேரத்திற்கு பின்பு பழங்களை வெளியே எடுத்து முழுவதுமாக பழுப்பதற்கு அறை வெப்பநிலையில் வைப்பார்கள்.

இயற்கையான முறையில், 10 நாட்கள் பழுக்க எடுத்துக்கொண்ட மாம்பழங்கள், 100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் 24 மணி நேரம் வைக்கப்பட்ட பின் 5 நாட்களில் பழுத்துவிடும். இவைதவிர கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கும் நடைமுறையும் உண்டு

இந்த முறையில் பழங்களை பழுக்க வைப்பது  லாபம் என்பதால் வியாபாரிகள் இதைப் பின்பற்றி டன் கணக்கில் மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும் பழுக்க வைப்பது வழக்கமாக நடக்கும். இது மாம்பழ சீசன் என்பதால் அதிக அளவில் டன் கணக்கில் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. .

கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்சினைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில் சோதனையிட்டு மாம்பழங்களை பறிமுதல் செய்வார்கள். தற்போது தரமற்ற மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அதிகம் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 22 பேர் மற்றும் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கோயம்பேடு பழக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, எத்திலீன் பவுடர் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட 10.5 டன் எடை மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.7.5 லட்சம் ஆகும். இது தவிர பழுக்க வைக்கப் பயன் படும் ரசாயனம் எத்திலீன் 5 லிட்டர் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட மாம்பழங்கள் பயோ மெதனைசேஷன் பிளாண்டில் (Bio Methenazation plant) போட்டு அழிக்கப்படும்.

பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து சிக்கிய சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தரமற்ற பழங்கள் விற்பது தொடர்ந்தால் வியாபாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x