Published : 22 Jun 2018 08:13 PM
Last Updated : 22 Jun 2018 08:13 PM

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நீரிழிவு நோயையும் சேர்க்கக் கோரி வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

 முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நீரழிவு நோயை சேர்க்கவும், நீரழிவு நோய்க்கான இன்சுலின் ஊசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் 3 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. முன்பெல்லாம் பணக்காரர்கள் நோய் என்றழைக்கப்பட்ட நீரிழிவு நோய் மாறி வரும் நவீன உலகில் 35 வயதைக் கடந்த பெரும்பாலானோருக்கு இருப்பதைக் காண முடிகிறது. இதற்கென மாதம் மருத்துவச்செலவு, மாத்திரைக்கு 2000 ரூபாய் வரை செலவு ஏற்படும் நிலை உள்ளது.

அதிலும் இன்சுலின் ஊசி போடும் நிலைக்கு வந்தவர் தினமும் இன்சுலின் ஊசிக்கு பணம் செலவிட வேண்டும். இது தவிர நோய் பாதிப்பு அதிகமானால் ஏற்படும் சிகிச்சையும் அதிக செலவு பிடிக்கும் நிலை. பொதுமக்கள் காப்பீட்டு திட்டத்தில் இருந்தாலும் நீரிழிவு நோய்க்கு அது பொருந்தாது என்று நிராகிக்கின்றனர். இதனால் ஏழை மக்கள் நிலை திண்டாட்டமாகிறது. அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நீரிழிவு நோயைச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் கோரியிருப்பதாவது:

“அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு உள் நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை மாத்திரை மருந்துகளுடன், இன்சுலினும் இலவசமாக வழங்கப்பட்டாலும், அது காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படாததால் மேற்கொண்டு செலவழிக்க வேண்டி உள்ளது. நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு இன்சுலின் பணம் செலுத்தி போடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டி உள்ளது.

ரூ.160 மதிப்புள்ள ஒரு இன்சுலின் ஊசியை அரசு மானியத்தில் ரூ.74 வழங்கினாலும், வசதியில்லாத மக்கள் ஒரு நாளைக்கு 5 ஊசிகள் போடவேண்டுமென்றால் அவர்களின் பொருளாதார நிலையில் அதற்கு சாத்தியமே இல்லை. ஆகவே நீரிழிவு நோயை முதலமைச்சரின் விரிவடைந்த காப்பீட்டு திட்டத்தில் இணைத்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும். நீரழிவு நோய்க்கான விழிப்புணர்வுக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் செலவிடுவதை விட, இன்சுலின் ஊசியையும் இலவசமாக வழங்குவதற்கும் வகை செய்யவேண்டும்.

2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம், டில்லி, மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம், மடிகணினி, மிதிவண்டி, மின்சாரம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுப்பதைபோல, மனிதன் உயிர்வாழத் தேவையான மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக, முதலமைச்சர் தனிப்பிரிவு, சுகாதாரத் துறை செயலாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழக திட்ட இயக்குனர், தமிழக சுகாதார திட்ட இயக்குனர், சென்னை மருத்துவமனை முதல்வர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் ஆகியோருக்கு மார்ச் 1 மற்றும் மே 17 தேதிகளில் கொடுத்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடவேண்டும் எனவும் பொது நல வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, சி.சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x