Published : 22 Jun 2018 06:56 PM
Last Updated : 22 Jun 2018 06:56 PM

டெல்லி இளம்பெண்ணைக் கடத்திய லாரி ஓட்டுநர்: காட்டுக்குள் தப்பித்து ஒளிந்தவரை சாமர்த்தியமாக மீட்ட போலீஸ்

டெல்லியிலிருந்து பெங்களூர் சென்ற இளம்பெண் தவறான நபரால் சேலத்தில் கடத்தப்பட்டார். அவர் காட்டுக்குள் ஓடி தப்பிக்க கூகுள் மேப் உதவியால் அவரை போலீஸார் சாமர்த்தியமாக மீட்டனர்.

டெல்லியைச் சேர்ந்தவர் ஜான்வி (19). இவர் சேலம் எம்டிஎஸ் நகரில் உள்ள மசாஜ் சென்டரில் வேலைக்குச் சேர்வதற்காக அந்த மசாஜ் உரிமையாளருடன் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக டெல்லியிருந்து பெங்களூரு வந்தவர் அங்கிருந்து பேருந்தில் சேலம் எம்டிஎஸ்க்கு வந்து இறங்கியுள்ளார். அவரை வரவேற்று அழைத்துச் செல்ல மசாஜ் சென்டர் உரிமையாளர் ஒரு நபரை அனுப்பியிருந்தார். பேருந்திலிருந்து இறங்கிய ஜான்வி அந்த நபருக்காகக் காத்திருந்துள்ளார்.

அப்போது இளம்பெண் தனியாக நிற்பதைப் பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் பக்கத்தில் வந்து நின்றுள்ளார். அவர்தான் மசாஜ் சென்டர் முதலாளி என்று நினைத்த ஜான்வி அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் அவரை அங்கு இங்கு சுற்றி யாருமற்ற வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஜான்வி அவரை நீங்கள் யார் என்று விசாரித்தபோது, யாராக இருந்தால் என்ன என்று மிரட்டியுள்ளார். அப்போது தான் தப்பான ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறியது தெரியவந்துள்ளது.

வண்டியை நிறுத்தச்சொல்லி ஜான்வி கூறியபோது நிறுத்திய அந்த நபர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்வி அவரிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடியுள்ளார். காட்டுக்குள் அவரை துரத்திய அந்த நபர் ஜான்வி சிக்காததால் திரும்பிச்செல்ல ஜான்வி காட்டுக்குள் வெகுதூரம் வந்துவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தான் எப்படி வெளியே செல்வது என்பது தெரியாமல் செல்போனை எடுத்துள்ளார். நல்லவேளையாக செல்போனில் டவர் இருந்தது. பின்னர் தன்னை சேலம் வரச்சொன்ன மசாஜ் சென்டர் முதலாளிக்கு போன் செய்து நடந்ததைக் கூறி அழுதுள்ளார். காட்டுக்குள் தான் தனியாக சிக்கிக்கொண்டதையும் வெளியே வர வழிதெரியாமல் இருப்பதையும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை தைரியாக ஒரே இடத்தில் இருக்கச்சொன்ன மசாஜ் சென் டர் உரிமையாளர் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு போன் செய்து நடந்ததை தெரிவித்து உதவி கேட்டுள்ளார். போலீஸார் ஜான்வியுடன் பேசியுள்ளனர். ஆனால் ஜான்விக்கு அவர் இருக்கும் இடத்தை சொல்லத் தெரியவில்லை. உடனடியாக போலீஸார் சம்யோசிதமாக யோசித்துள்ளனர். ஜான்வியை போலீஸார் கூகுள்மேப் உதவியுடன் தேடினர்.

அப்போது ஜான்வி இருக்கும் வனப்பகுதி தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவரை மீட்டனர். ஜான்வி தன்னை அழைத்துச் சென்ற இருசக்கர வாகன எண்ணை கூறிய அடிப்படையில் போலீஸார் ஜான்வியைக் கடத்திய அன்பழகன் (37) என்பவரை கைது செய்தனர். அவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஜான்வி தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அவரைக் கடத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x