Published : 22 Jun 2018 04:34 PM
Last Updated : 22 Jun 2018 04:34 PM

மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த கூடாது: மருத்துவர் சங்கம் எதிர்ப்பு

பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.

இது குறித்து இச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தங்களது பயிற்சிக் கால உதவி ஊதியத்தை ( Stipend) உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதற்காகப் போராடி வருகின்றனர்.

தமிழகத்தை தவிர, இதர பல மாநிலங்களிலும், மத்திய அரசின் நிறுவனங்களிலும் இந்த பயிற்சிக் கால உதவி ஊதியம் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே,தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையாக இந்த பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். போராடும் மாணவர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இந்தப் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். பல் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றால், அடுத்த ஆறு மாதம் கழித்து மறு தேர்வை எழுதி வெற்றி பெற்ற பிறகுதான் அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர முடியும் என்ற நிலை உள்ளது.இந்த "பிரேக் சிஸ்டம்(Break System)" முறையால் பல் மருத்துவ மாணவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே, எம்.பி.பி.எஸ் படிப்பில் நடைமுறையில் உள்ளது போல் ,முதல் ஆண்டில் தோல்வியுற்றால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கூடுதல் தேர்வை (supplement) நடத்தி முதலாம் ஆண்டு பல் மருத்துவ மாணவர்கள் தங்களது பேட்ச் மாணவர்களுடன் அடுத்தக் கட்டப் படிப்பைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் படிப்புகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். இறுதியாண்டுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள் மறு தேர்வை நடத்திட வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்திடக் கூடாது.இது தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக் கணக்கான இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து விடும். ஏற்கனவே,அரசுப் பணியில் இருக்கும் இளம் மருத்துவர்களின் பதவி உயர்வையும் பாதிக்கும்.

சில துறைகளில் மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், அத் துறைகளில் மட்டும் ஓய்வு பெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்கும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.அதை விடுத்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சரியல்ல. இது பணி ஓய்வு பெறுதல் என்ற உரிமைக்கு எதிராக உள்ளது.

ஓய்வு பெறும் வயது, நீட் தேர்வு , அகில இந்தியத் தொகுப்பு, இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றங்கள் எடுக்கும் போக்கு சரியல்ல. அது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பறிக்கும் செயலாகும். இப்போக்கு நமது அரசியல் சட்டத்திற்கு முரணானதாகும்.நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, கவலையளிக்கும் செயலாகும்.

மருத்துவப் படிப்பை முடித்தவுடன் , அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ,ஓராண்டு மட்டும் தற்காலிகமாக கட்டாய அரசுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது இளம் மருத்துவர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்துவிடும். இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கூடாது. எக்ஸிட் தேர்வை கொண்டுவரக் கூடாது. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வேண்டும்.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x