Published : 22 Jun 2018 02:24 PM
Last Updated : 22 Jun 2018 02:24 PM

திமுகவில் ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் முதல்வர் போட்டி நடக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கும் முதல்வர் போட்டி நடக்கிறது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அதன் விவரம்:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்காக காத்திருக்காமல் கர்நாடக விவசாயிகளுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறாரே?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.75 டிஎம்சி நீரை வழங்கி, உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டல், உச்ச நீதிமன்றம் தான் செல்ல வேண்டும். உரிய நீரை வழங்க வேண்டும் என போதிய அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்வசதி செய்து தருமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதே. இதில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டது. ஸ்டெர்லைட்டுக்கு இனி தமிழ்நாட்டில் இடம் இல்லை. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. நீர், மின்வசதியை ஸ்டெர்லைட் ஆலைக்கு துண்டித்து விட்டோம். இதே நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் தெரிவிப்போம்.

காவிரி விவகாரம் குறித்து முதல்வருடன் மட்டும் தான் விவாதிப்பேன். அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் விவாதிக்க மாட்டேன் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளாரே?

தேரை எல்லோரும் கூடித்தான் இழுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து விவாதிக்கலாம். அதில் தவறு இல்லை. அமைச்சரவை என்பது கூட்டு உழைப்புதான். திமுகவில் பிரச்சினை இருக்கிறது என நினைக்கிறேன். ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் முதல்வர் போட்டி நடக்கிறது.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை காவல்துறையை வைத்தே நிறைவேற்ற நினைக்கிறதா தமிழக அரசு?

தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் மக்கள் மீது திணிக்கவில்லை. மக்கள் விரோத திட்டத்திற்கு அரசின் ஆதரவு இல்லை. மக்கள் விரும்பும் திட்டங்களுக்குத்தான் அரசின் ஆதரவு உண்டு. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஒரு வழி பாதையாக இருந்தபோது விபத்துகள் அதிகம் நடைபெற்றன. இப்போது, 4-5 விபத்துகளே நடைபெறுகின்றன. கட்டமைப்பை மேம்படுத்த அரசு முயல்கிறது.

அதில் சிலருக்கு சிரமங்கள் இருக்கலாம். 20-30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்கும், வாகனங்கள் எண்ணிக்கை, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிமையாளர்களுக்கு 3 மடங்கு அதிகமாக நிவாரணம் வழங்கப்படுகிறது. குறைகள் இருந்தால் ஆட்சியரிடம் முறையிடலாம். மக்களின் வளர்ச்சிக்காகத் தான் இந்த திட்டம். தமிழ்நாட்டில் 10,000 கோடி முதலீடு கிடைப்பது பெரிய விஷயம். இத்திட்டத்தால் சென்னை-சேலம் போக்குவரத்து நேரம் குறையும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x