Published : 22 Jun 2018 01:07 PM
Last Updated : 22 Jun 2018 01:07 PM

ஆட்சியமைக்க தமிழக கடவுள் அருளை கேட்பவர் தமிழக மக்களின் துயரம் பற்றி நினைக்கமாட்டாரா?- குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம், தேவை குறித்து கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொள்ள மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார். ஸ்ரீரங்கம் சென்ற அவர் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு சென்ற ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் மேள தாளங்கள் முழங்க கோயில் பட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவருக்கு திலகமிட்டு வரவேற்பளித்தனர். கோவில் யானை அவருக்கு மாலை அணிவித்தது.

அதன் பின்னர் திருமணம் மற்றும் காதணி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் மேட்டூரில் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது, தமிழகத்தில் தமிழக மக்களை பற்றி கவலைபடாத ஆட்சி நடைபெற்று வருகிறது.

விரைவில் சந்திக்க உள்ள தேர்தலில் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது. ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம், தேவை குறித்து கவலைப்படவில்லை’’ என்று பேசினார்.

முன்னதாக நேற்று மாலை திருச்சியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜகவால் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நீட் பிரச்னையால் மனமுடைந்து மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அதைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்த எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? என்றால் இல்லை. எடப்பாடி நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.

தி.மு.க நினைத்திருந்தால் ஏன் ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்நேரம் ஆட்சியை முடித்திருக்கலாம். கருணாநிதி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் விட்டிருப்பாரா? எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 1976-ல் நெருக்கடி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் கருணாநிதி ஆட்சிதான் கவிழ்ந்திருக்கிறதே ஒழிய, கருணாநிதி ஒருநா‌ளும் யாரையும் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்ததில்லை.

நான் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது அங்கு வரும் பல ஐஏஎஸ் அலுவலர்கள், ஏன் நீதிபதிகள் கூட நல்ல நல்ல சான்ஸ் வருது. ஏன் முடிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பொதுமக்களும், கட்சிக்காரர்களும்கூட அப்படித்தான் கேட்கிறார்கள். எம்எல்ஏ-க்கள் மனது மாற வேண்டும். அவர்கள் மனது மாறினால் அடுத்த நிமிடம் அவர்கள் பதவியில் நீடிக்க முடியுமா?

நாம் ஆட்சியில் இல்லையென்றாலும் கூட நாம்தானே அமைச்சர் மாதிரி இருக்கிறோம். பதவி இன்று வரும் நாளைப் போகும். ஆனால், அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாம் நிச்சயம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பல கோடி கமிஷன் வருகிறது, பல சொத்துக்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள்.’’ என ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x