Published : 22 Jun 2018 07:41 AM
Last Updated : 22 Jun 2018 07:41 AM

தொலைபேசி இணைப்பக வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: மாறன் சகோதரர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் ஜூன் 29-க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் கடந்த 2004 -07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சன் தொலைக்காட்சிக்காக கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாகவும், அதன்மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக தயாநிதி, கலாநிதி, சென்னை பிஎஸ்என்எல் முன்னாள் பொதுமேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ கடந்த 2013-ல் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து கடந்த மார்ச் 14-ம் தேதி உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும், ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை. 4 பேர் மட்டுமே வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், கீழமை நீதிமன்றம் 7 பேரையும் மொத்தமாக விடுவித்திருப்பது தவறு. எனவே, இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் வரும் ஜூன் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x