Published : 22 Jun 2018 07:41 AM
Last Updated : 22 Jun 2018 07:41 AM

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.14 கோடி திட்டச் செலவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ. 13 கோடியே 58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் கடந்த 2013-ல் 110 -விதியின் கீழ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில்,‘சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, நேரு விளையாட்டு அரங்கின் பயிற்சி ஓடுதள பாதையின் அருகில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டுக்கு முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் நீர் வடிகட்டும் நிலையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடைமாற்றும் அறை, நிலையான வெப்பநிலையை பராமரிக்கும் உபகரணங்களுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நீர் சிகிச்சை அளிக்கும் உள்ளரங்க நீச்சல் குளம், பார்வையாளர் இருக்கைகள், ஸ்குவாஷ் ஆடுகளங்கள், உலகளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடத்தும் வகையில் குளிரூட்டி மற்றும் மின் விளக்கு வசதிகளுடன் கூடிய 4 ஆடுகளங்கள், இரண்டு கையுந்து பந்து ஆடுகளங்கள், கூடைப்பந்து ஆடுகளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில், அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தையும் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். கடந்த 2013-ல் தென்கொரியாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக குளிர்கால போட்டிகளில் ஆடவர் தரை ஹாக்கியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்காக விளையாடிய மதுரை பாலு பாண்டியனுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x