Last Updated : 22 Jun, 2018 07:42 AM

 

Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM

தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வருவதில் திடீர் சிக்கல்: தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு

தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் நீர்இருப்பு குறைவாக இருப்பதால் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நதிநீர் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

குடிநீர் தேவைக்காக சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வருவதற்காக 1976-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 5 டிஎம்சி வீதம் மொத்தம் 15 டிஎம்சி கிருஷ்ணா நதிநீரை இரண்டு கட்டங்களாக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெலுங்கு கங்கை ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு கையெழுத்தானது. பின்னர், இந்தத் திட்டப்பணிகள் முடிந்து 1996-ம் ஆண்டு சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஆண்டுக்கு 3 முதல் 5 டிஎம்சி தண்ணீர்தான் வந்தது. பருவமழை பொய்த்ததால் சில ஆண்டுகள் தண்ணீர் வரவில்லை. இதுவரை சுமார் 80 டிஎம்சி கிருஷ்ணா நீர்தான் வந்து சேர்ந்துள்ளது.

மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரில் ஆவியாவது போக 12 டிஎம்சி தண்ணீர் வந்து சேர வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து ஆந்திர அணைகளில் நீர்இருப்பு குறைவு காரணமாக அதிகபட்சமாக 8 டிஎம்சி வரைதான் தண்ணீர் வந்துள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி கூறியது: ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அதனால் ஆந்திரா மாநிலம் மட்டுமல்லாமல் தெலங்கானா மாநிலமும் தனது பங்காக சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், மேல்நிலையில் உள்ள மகாராஷ்டிரா அரசும், கர்நாடக அரசும் தாங்கள் வழங்க வேண்டிய தலா 5 டிஎம்சி கிருஷ்ணா நீரை வழங்குவதில்லை. அதனால், எங்களது பங்கான 5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தர முடியும் என்று ஆந்திர அரசு கூறி வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு கிருஷ்ணா நதிநீர் நடுவர் தீர்ப்பாயத்தை அணுகி மகாராஷ்டிரா அரசும், கர்நாடக அரசும் தலா 5 டிஎம்சி தண்ணீரை ஆந்திராவுக்கு வழங்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் ஆந்திர அரசு தமிழகத்துக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் திறந்துவிடாது. இதனால் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வருவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

சட்டரீதியான நடவடிக்கை

கிருஷ்ணா நதிநீர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு வந்து, அங்கிருந்து கண்டலேறு அணைக்கு வந்து சேரும். பின்னர் கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர், சென்னைக் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியை வந்தடையும்.

நேற்றைய நிலவரப்படி 215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஸ்ரீசைலம் அணையில் 28.97 டிஎம்சியும், 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 11.87 டிஎம்சியும், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 5.16 டிஎம்சியும் நீர்இருப்பு உள்ளது.

கடந்தாண்டைவிட இந்த அணைகளில் நீர்இருப்பு அதிகம் இருக்கின்ற போதிலும் மகாராஷ்டிர, கர்நாடக அரசுகள் கிருஷ்ணா நதிநீர் வழங்காததாலும், தெலுங்கானா, ஆந்திர அரசுகள் வழங்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு அளவு நிர்ணயிப்பதில் இழுபறி நீடிப்பதாலும் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x