Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM

பள்ளி, கல்லூரி மாணவர்கள் லீவுக்காகத்தான் ஜல்லிக்கட்டை ஆதரித்து தமிழகத்தில் போராட்டம் நடத்தினர்: சிவகங்கை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

‘லீவு வேணும்னு சொல்லி ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆசி இருப்பதால்தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது. இதைப் பொறுக்க முடியாத ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்யச் சொல்கிறார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் போனதற்குப் பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? என்ன கட்சி நடத்துறீங்க, உங்கள் கொள்கைகள் என்ன, எத்தனைப் போராட்டம், மாணவர்களை எல்லாம் தூண்டிவிட்டுப் போராடினார்கள். அந்த நேரத்தில்தான் ஜல்லிக்கட்டு பிரச்சினை. அது எல்லாக் கிராமங்களிலும் தீப்பிடிச்சு எரியுது. ஏதோ ஒரு போராட்டம், நமக்கு பள்ளிக்கூட லீவு வேணும்னு சொல்லி நம்முடைய குழந்தைகள், குட்டிகள், கல்லூரி மாணவர்கள் எல்லாரும் அன்றைக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து போராட்டம் பண்ணினார்கள்.

600 பயிற்சி மையங்கள்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என பிரதமரை சந்தித்து நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களுக்கு சமமாக தமிழக மாணவர்களுக்கு 600 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களைவிட அதிகமான பேர்களை வெற்றி பெற வைத்துள்ளோம்.

மத்திய அரசோடு இணக்கம்

இன்று மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால்தான் மதுரையில் எய்ம்ஸ், சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டங்களை கொண்டுவர முடிகிறது.

அமைச்சர் ஏதாவது சர்ச்சையாகப் பேசமாட்டாரா என சிலர் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x