Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM

8 வழி பசுமைச் சாலை திட்டம் குறித்து 5 மாவட்ட மக்களிடம் பாமக கருத்து கேட்பு: ராமதாஸ் தகவல்

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டங்களை பாமக நடத்தவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல பாமக. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசு மைச் சாலைத் திட்டம் கை விடப்பட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பாமக நடத்த உள்ளது.

பாமக இளைஞரணித் தலை வர் அன்புமணி தலைமையில் நடக்கும் மக்கள் சந்திப்பு, கருத்துக்கேட்பு கூட்டங்களில் வேளாண் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்பர். இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x