Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா?- சோனியாவுடன் கமல்ஹாசன் ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசன் டெல்லியில் நேற்று சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்படப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந் துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங் கிய கமல்ஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தும் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

ரஜினியின் பின்புலத்தில் பாஜக இருப்பதாக ஆரம்பம் முதல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்றவாறு பாஜகவின் கருத்துகளை ஒட்டியே ரஜினியின் கருத்துகளும் இருந்து வருகின்றன.

அதே நேரத்தில், ரஜினிக்கு நேரெதிர் திசையில் காங்கிரஸோடு நட்பு பாராட்டி வருகிறார் கமல்ஹாசன். கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது தமிழக அரசியல் தலைவர்களில் கமல்ஹாசன் மட்டும் கலந்துகொண்டார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துப் பேசி னார்.

2-வது முறை சந்திப்பு

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல்ஹாசன், 2-வது முறையாக ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதோடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்படப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன், “மரியாதை நிமித்தமாகவே சோனியா காந்தியை சந்தித்தேன். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், சில அவலங்கள் குறித்தும் விவாதித்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேச இது நேரமில்லை. வரும்காலத்தில் ஒருவேளை பேசலாம். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா பிரதிநிதியை நியமிக்காதது குறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் கண்டிப்பாகப் பேசுவேன்” என்றார்.

கமல்ஹாசன் - சோனியா காந்தி சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “2019 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த மறைமுக விவாதங்களை பல் வேறு கட்சிகள் நடத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு, காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் தான் இருப்போம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். தேர் தல் நேரத்தில் புதிய கூட்டணி உருவானால் அதற்கு இந்த சந்திப்புகள் கைகொடுக்கும்” என்றார்.

ஒரு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிறகு, அடுத்த தேர்தலில் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x