Published : 10 Jun 2018 02:55 PM
Last Updated : 10 Jun 2018 02:55 PM

மந்தாரக்குப்பம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை: ஆர்வமுடன் வாங்கும் கிராம மக்கள்

நெய்வேலி மந்தாரக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கழுதைப் பால் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

கழுதை வளர்ப்பவர்கள் நெய்வேலி மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் கழுதையுடன் தெருத்தெருவாக சென்று பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவ குணம் கொண்டதாக கருதி கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கின்றனர்.

மருத்துவ குணம் கொண்டது

இதுதொடர்பாக கழுதை பால் விற்பனை செய்யும் ராமர் கூறுகையில், “அழுத பிள்ளைக்கு கழுதைப்பால் கொடு என்ற வழக்கு சொல் கிராமப்புறங்களில் உண்டு. கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது. இதனை குடித்தால் சளி, இருமல், கரப்பான் உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். ஒரு பாலாடை (சங்கு) அளவு ₹50-க்கும், 50 மில்லி ₹250-க்கும் விற்பனை செய்கிறோம். சிறிய குழந்தைகள் என்றால் ஒரு சங்கு அளவு போதுமானது. பெரியவர்களுக்கு 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள் பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை நேரிடையாக கிராம பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கலப்படம் இல்லாமல் அங்கேயே கறந்து விற்பனை செய்கிறோம். நெய்வேலி,விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். தமிழகம் முழுவதும் சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகிறோம்” என்கிறார்.

குடிக்கக்கூடாது

இதுபற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் உள்ள சித்த மருத்துவர் டாக்டர் அர்சுணன் கூறுகையில், “கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகளுக்கு செரிமான சக்தி குறைவு என்பதால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடல் வலிமை பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது. பெரியவர்களும் குடிக்கக்கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x