Published : 10 Jun 2018 02:02 PM
Last Updated : 10 Jun 2018 02:02 PM

தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்த அரசு ஊழியர்களை மிரட்டி போலி வாக்குமூலம் வாங்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல்துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்களின் மேசைகளில் காவல்துறை சார்பில் ஒரு படிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது? போராட்டக்காரர்களால் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு எத்தகைய காயங்கள் ஏற்பட்டன; பொதுச்சொத்துக்கள் எந்தெந்த வகையில் சேதப்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு பணியாளரும் அவர்களின் பெயர், முகவரி, பதவி உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருந்த விவரங்களை காவல்துறையினர் விரும்பும் வகையில் நிரப்பித் தரும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகாரிகளின் அனுமதியின்றி இத்தகைய விவரங்கள் கோரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், உடனடியாக தங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, படிவத்தை நிரப்பித் தருவதில்லை என்று தீர்மானித்தனர் அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் படிவத்தை நிரப்பித்தர மறுத்து விட்டனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதிவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை ஆணையமோ, சி.பி.சி.ஐ.டி காவல்துறையோ விரும்பினால் அவர்களை சாட்சிகளாக பதிவு செய்து நேரில் அழைத்து விசாரிக்கலாம். ஆனால், அந்த அமைப்புகள் அத்தகைய விசாரணை எதையும் நடத்தாத நிலையில், இந்த விசாரணைக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத, துப்பாக்கிச் சூட்டை நடத்திய உள்ளூர் காவல்துறை இத்தகைய படிவத்தை வழங்கி தங்களுக்கு சாதகமாக நிரப்பித் தரும்படி கட்டாயப்படுத்தியதன் மர்மம் என்ன?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய பொதுமக்களில் ஒருவர் கூட அலுவலகத்துக்குள் நுழைய வில்லை. அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர் கூட தாக்கப்படவில்லை. பொதுச் சொத்துக்களுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படவில்லை. அலுவலக நுழைவாயில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான தொலைக்காட்சித் திரை எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததும், போராட்டக்காரர்கள் ஆட்சியர் வளாகத்திற்குள் நுழையவில்லை என்பதும் பல்வேறு உண்மை கண்டறியும் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள்; பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளூர் காவல்துறை நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. எங்கிருந்தோ தமிழக ஆட்சியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் உள்ளூர் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் தான் ஆணையிட்டதாக ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றியது. ஆனால், சம்பவ இடத்திலேயே இல்லாத துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து, அதுவும் அம்பலமானது. அதனால் வேறு வழியின்றி இப்படி நாடகத்தை அரங்கேற்ற அரசு முயல்கிறது. செய்த குற்றத்தை மறைக்க அரசே போலி ஆவணங்களை தயாரிப்பது அருவருக்கத்தக்கது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச முற்பட்ட போது, நீதி விசாரணை நடைபெறும் நிலையில் அதுகுறித்து விவாதிப்பது விசாரணையை பாதிக்கும் என்று முதல்வர் கூறினார். சட்டப்பேரவையில் பேசுவதே விசாரணையை பாதிக்கும் எனும்போது, விசாரணையுடன் சம்பந்தமில்லாத உள்ளூர் காவல்துறை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் பெறுவது விசாரணையை பாதிக்காதா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x