Published : 10 Jun 2018 11:40 AM
Last Updated : 10 Jun 2018 11:40 AM

நாளையுடன் முடிகிறது 27 ஆண்டுகள்: பேரறிவாளன் விடுதலை எப்போது?- ராமதாஸ் கேள்வி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இராஜிவ்காந்தி கொலைவழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு நாளையுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன . கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனைக் காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 27 ஆண்டுகளுக்கு முன் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர். ஆனால், இராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களை பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி கொலை வழக்கில் சேர்த்தனர். ஒளி மங்கிய வேளையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட பேரறிவாளனின் வாழ்க்கை அதன் பின்னர் இருள் சூழ்ந்ததாக மாறி விட்டது. இது நடந்து 27 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பதின்வயதில் கைது செய்யப்பட்டு வாழ்நாளின் பாதியை இழந்து விட்ட பேரறிவாளனின் விடுதலைக்காக, தங்கள் உயிரில் பாதியை இழந்து விட்ட அவனது பெற்றோர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உணராத மத்திய, மாநில அரசுகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தை வைத்து நீதிமன்றங்களின் உதவியுடன் இரக்கம் இல்லாமல் அரசியல் விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கின்றன.

பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்சநீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் பேரறிவாளனை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்ய அனைத்து நியாயங்களும் உள்ளன என்பது ஒருபுறமிருக்க, அவரை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றங்கள் விதித்த தண்டனையை விட கூடுதலாகவே தண்டனை வழங்கியும் அவர் இன்னும் விடுதலை செய்யப்படாதது ஏன்? என்பது தான் தமிழர்களின் வினாவாகும்.

இராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த 2014-ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தனது கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலை தான் இப்போதும் நீடிக்கிறது. 7 தமிழர்கள் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவுக்கு நேரில் நன்றி தெரிவித்த பேரறிவாளனின் தாயாரிடம்,‘‘ உங்கள் மகனை விடுதலை செய்து உங்களிடம் ஒப்படைப்பேன். கலங்காதீர்கள்’’ என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை காப்பாற்ற வில்லை. அவருக்குப் பிறகு அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறிக்கொள்பவர்களும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் எதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறை வாசம் தொடர்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள்தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த பினாமி ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடமிருந்து நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161&ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி அவர்கள் விடுதலை ஆவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x