Published : 10 Jun 2018 10:12 AM
Last Updated : 10 Jun 2018 10:12 AM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்: பக்தர்கள் ஓட்டம், நுழைவு வாயில் மூடல்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கேரளாந்தகன் நுழைவு வாயில் பகுதியில் நேற்று தேனீக்கள் கொட்டியதில் ஒரு பெண் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் சுதையால் ஆன யாழி சிற்பத்தின் ஒரு பகுதி அண்மையில் சேதமடைந்தது. அதை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, பராமரிப்புப் பணிக்காக கோயில் பணியாளர்கள் நேற்று இரும்புக் கம்பால் ஆன சாரம் அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில் இருந்த தேனீக்களின் கூடு கலைந்தது. அதில் இருந்த தேனீக்கள் அங்குமிங்கும் பறந்தன. அவை, கோயிலுக்கு வந்த பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டியதால், பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

தேனீக்கள் கொட்டியதில், சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் கீழவாசல் ஆரோக்கியதாஸ் (32), விஜயகுமார் (52), கரந்தை பழனிவேல் (63), அருள்மொழிப்பேட்டை கணேசன் (48), களிமேடு முருகேசன் (23) ஆகியோர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் உட்பட 5 பக்தர்களை தேனீக்கள் கொட்டின. அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கேரளாந்தகன் கோபுர நுழைவு வாயில் கேட் ஒரு மணி நேரம் மூடப்பட்டது. இதனால், கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியவில்லை. கோயிலின் உள்ளே இருந்த பக்தர்கள் சிவகங்கை பூங்கா கேட் வழியாக வெளியேறினர்.

கூட்டை அகற்ற மறுப்பு

தகவலறிந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தேன் கூட்டை அகற்ற மறுத்துவிட்டனர். ஏற்கெனவே இதேபோன்று ஒருமுறை தேனீக்கள் பக்தர்களை கொட்டியபோது, தேன் கூட்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றியுள்ளனர்.

அப்போது, தங்களது அனுமதியின்றி எப்படி இப் பணியில் ஈடுபடலாம் என தொல்லியல் துறையினர் கேட்டதால், தற்போது முதலுதவி அளிப்பதற்கு மட்டுமே வந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x