Last Updated : 10 Jun, 2018 10:06 AM

 

Published : 10 Jun 2018 10:06 AM
Last Updated : 10 Jun 2018 10:06 AM

அந்த்யோதயா விரைவு ரயில் கடலூர் மாவட்டத்தை ஏன் புறக்கணிக்கிறது?- பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட முடிவு

சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புதிதாக விடப்பட்ட அந்த்யோதயா விரைவு ரயில் கடலூர் மாவட்டத்தில் எந்த ரயில் நிலையங்களிலும் நின்று செல்வதில்லை. கடலூர் மாவட்டத்தை புறக்கணிப்பதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் செல்ல இரு வழி இருப்பு பாதைகள் உள்ளன. சென்னையில் இருந்து விருத்தாசலம் வழியாக செல்லும் ‘காட் லைன்’ அதில ஒரு ஒரு இருப்புப் பாதை வழி. சிதம்பரம் வழியாக செல்லும் ‘மெயின் லைன்’ மற்றொரு வழியாகும்.

இந்த இரு வழித் தடங்களில் அதி விரைவு, விரைவு, பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் நாள்தோறும் செல்கின்றன.

இந்த இரு வழிகளிலும் ஏராளமான ரயில்கள் சென்றாலும் பொதுமக்கள் பலருக்கு இன்னும் ரயில்களில் இடம் கிடைக்காமல் திரும்பி செல்லும் நிலையே உள்ளது.

இதற்கிடையில் தென்மாவட்டங்களில் முக்கிய பகுதியாக உள்ள திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரே ஒரு விரைவு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் முன்பதிவில் இடம் கிடைப்பது பெரும் சிரமம். முன்பதிவு கிடைக்காமல் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு பதிவு செய்யாத பயணிகள் அமரும் பெட்டியில் கடும் சிரமத்திற்கிடையே ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், தென் மாவட்ட மக்கள், மெயின் லயன் பகுதிகளில் இருந்து ரயில்களில் பயணம் செய்பவர்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அமைச்சருக்கும் கடிதமும் அனுப்பியிருந்தனர்.

நீண்ட கால கோரிக்கைக்கு செவி சாய்த்து, சென்னை தாம்பரத்திலிருந்து - திருநெல்வேலிக்கு அந்த்யோதயா விரைவு ரயிலை தினந்தோறும் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே துறை அறிவித்தது. நேற்று முன்தினம் ( ஜூன் 8) மாலை 4.30 மணிக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஹன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் தினந்தோறும் தாம்பரத்தில் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. மறுமார்க்கமாக திருநெல்வேலியில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது.

இது செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட 9 இடங்களில் நின்று செல்கிறது. முன்பதிவில்லாத 16 பெட்டிகளைக் கொண்ட ரயிலாக இது இயக்கப்படுகிறது. இந்த ரயிலை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

ஏன் இந்த பாரபட்சம்?

அதே நேரத்தில், கடலூர் மாவட்டம் வழியாக சுமார் 80 கி.மீ. தொலைவு பயணிக்கும் இந்த ரயில், மாவட்டத்தில் எந்த ரயில் நிலையத்திலும் நின்று செல்லவில்லை. மாவட்டத்தின் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர், ஆன்மிக நகரான சிதம்பரம், வணிக நகரான பண்ருட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கவில்லை.

அந்த்யோதயா ரயில் விழுப்புரம் மாவட்டத்தை விட்டால் 122 கி.மீ தூரத்தில் உள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தான் நிற்கிறது. கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சத்தை ரயில்வே நிர்வாகம் செய்கிறது என்று மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நிஜாமுதீன் கூறியதாவது:

தென் மாவட்டங்களுக்கான ரயிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடலூர் மாவட்ட ரயில் நிலையங்களில் நின்று சென்றால் இந்த ரயிலை கடலூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, புதுவையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த ரயில் நிற்காமல் செல்வதால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளோம்.தற்போது கடலூரில் துறைமுகம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிப்காட் நிறுவனங்கள் இயங்குவதோடு, ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. எனவே, இரு நகரங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், ரயில்வே நிர்வாகம் கடலூர் மாவட்டத்தைப் புறக்கணித்ததை ஏற்க முடியாது. விரைவில் இதற்காக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தொடர்ந்து புறக்கணிப்பு

கடலூர் ரயில் பயணிகள் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வெண்புறா குமார் கூறியதாவது:

ஒவ்வொரு புதிய ரயில் அறிவிப்பின்போதும் கடலூர் மாவட்டம் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கூறும்போது அவர்கள் ரயில்வே நிர்வாகத்தைத் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால், தொடர் அழுத்தம் இல்லாததால் கடலூர் மாவட்டம் ரயில்வே நிர்வாகத்தால் புறக்கணிப்புக்குள்ளாகி வருகிறது. மக்களைப் பாதிக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக ரயில் பயணிகள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும், கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுனில்குமார் ஆகியோர் கூறுகையில். “தென்மாவட்ட பகுதிகளில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல் பலர் பணியாற்றுகிறார்கள். இங்குள்ள நடராஜர் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.

மேலும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு வசதியாக இந்த ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். இதனால் சிதம்பரம் பகுதியில் வர்த்தக சுழற்சியும் மேம்படும். எனவே இந்த ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x