Published : 10 Jun 2018 09:56 AM
Last Updated : 10 Jun 2018 09:56 AM

மனிதக் கழிவு அகற்றும்போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு வட்டியுடன் ரூ.10 லட்சம் இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மனிதக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை 8 சதவீத வட்டியுடன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் தொடர்ந்த வழக்கில், ‘‘மனிதக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளை அள்ளும்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, ‘இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் தமிழக அரசு தாமதம் செய்கிறது. இழப்பீட்டை வட்டியுடன் வழங்க மறுக்கிறது’ என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

அரசுகளின் கடமை

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தடை செய்யப்பட்டதாகும். இதுபோன்ற ஆபத் தான தொழிலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

மனிதக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும். எனவே, இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு தாமதம் செய்யக்கூடாது.

மனிதக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை கடந்த 2014 அக்டோபர் 1-ம் தேதி முதல் 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x