Published : 10 Jun 2018 08:49 AM
Last Updated : 10 Jun 2018 08:49 AM

சேலத்தில் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைதால் உறவினர்கள் முற்றுகை: போலீஸ் விசாரணைக்குப் பின்னர் சிலர் விடுவிப்பு

சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிலரை சேலத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இவர்களில் 2 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

சேலம்-சென்னை இடையே அரூர், திருவண்ணாமலை மார்க்கத்தில் 277 கிமீ தூரத்துக்கு எட்டு வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 7,500 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனம், ஏழு ஆறுகள், எட்டு மலைகள் கடும் பாதிப்படையும் எனக் கூறி இத்திட்டத்துக்கு விவசாயிகள், தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு சேலம் குப்பனூரில் உள்ள பசுமை வழி விரைவுச் சாலை எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் நாராயணன் (40) மற்றும் வீராணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (35) மற்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜா, கந்தசாமி, பழனியப்பன், ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸார் விசாரணைக்காக சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதேபோல, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சீலநாயக்கன்பட்டி சூரியகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி தொகுதி இளைஞர் பாசறை இணைச் செயலாளர் மாரிமுத்து (30) மற்றும் பூலாவரியைச் சேர்ந்த விவசாயி ரவி ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உறவினர்கள் திரண்டு எதிர்ப்பு

சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீஸார் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் உறவினர்கள் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி காவல் நிலையங்கள் முன்பு நேற்று காலை திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்,

இதற்கிடையில், விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களிடம் போலீஸார் அவர்களது சுய விவரம், திட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் முகவரியை பெற்றனர். இதில், முத்துக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் இருவரையும் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்கள் குறித்தும், அவர்களின் பின்புலத்தில் உள்ள கட்சி, அமைப்புகள் குறித்தும் போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இத்திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x