Published : 10 Jun 2018 08:40 AM
Last Updated : 10 Jun 2018 08:40 AM

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதா?- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்

சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:

கடல் மாசுபடுவதைத் தடுக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இளம் வயதினர் மனதில் கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். நாம் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனில் 80 சதவீதத்தை கடல்தான் தருகிறது. இதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் தொடர்பாக தங்கள் கருத்து என்ன?

ஒரு படம் வெற்றி பெறுவது என்பது மக்கள் தீர்மானிக்கும் விஷயமாகும். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அரசியலில் அவர்கள் என்ன கொள்கையை முன்வைக்கிறார்கள், மக்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

இந்த விஷயங்களில் எம்ஜிஆர் சிறப்பாக இருந்ததால் மக்கள் அங்கீகாரம் கொடுத்தனர். ஒரு படம் வெற்றியடைவதால் மட்டுமே ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்கை, லட்சியம், உணர்வு, மக்களுடன் இருந்து ஆற்றும் பணி ஆகியவற்றால்தான் ஒருவரை தலைவராக ஏற்க முடியும்.

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி யுள்ளாரே?

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு, வேலைவாய்ப்பும் அதிகளவில் அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. சாலை வசதிகள் நன்றாக உள்ளன.

சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல. அவர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அரசியலுக்காக சேற்றை வாரி தூற்றும் வேலையை அவர் செய்யக் கூடாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x