Published : 10 Jun 2018 08:35 AM
Last Updated : 10 Jun 2018 08:35 AM

2-வது நாளாக குளிக்கத் தடை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இந்த அருவிகளில் குளிக்க நேற்றும் தடை விதிக்கப்பட்டது. எனினும், மிதமாக தண்ணீர் விழுந்த பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

பிரதான அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. நிலைமையை போலீஸார் தீவிரமாக கண்காணித்து, வெள்ளம் குறைவாக இருக்கும்போது மட்டும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.

இந்நிலையில், நேற்றும் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரிறைச்சலுடன் அருவிகளில் வெள்ளம் சீறிப் பாய்ந்தது. எனவே, இந்த அருவிகளில் குளிக்க நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் குளிக்க முடியாவிட்டாலும் தொலைவில் நின்று வெள்ளத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் அதிகமாக கொட்டியது. அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழைய குற்றாலத்தில் கூட்டம் அலை மோதியது.

மணிமுத்தாறில் வெள்ளம்

மணிமுத்தாறு அணை அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x