Published : 02 Jun 2018 09:26 PM
Last Updated : 02 Jun 2018 09:26 PM

சாலையில் சென்றவரை ஆட்டோவில் கடத்திய நபர்கள்: இருப்பதைப் பிடுங்கிவிட்டு பாதுகாப்பாக இறக்கிவிட்டுச் சென்றனர்

ஆர்.கே.சாலையில் நடந்துசென்ற நபரை ஆட்டோவில் கடத்திய நபர்கள் நகை, பணத்தை பறித்துக்கொண்டு பாதுகாப்பாக இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டை வள்ளியம்மாள் தெருவில் வசிப்பவர் புபேந்தர் யாதவ் (24). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். நேற்றிரவு 3 மணி அளவில் பணி முடிந்துள்ளது. வீட்டுக்குச் செல்ல வாகனம் இல்லாததால் ஆர்.கே.சாலையில் நடந்து சென்றுள்ளார்.

நீல்கிரீஸ் அருகே நடந்து செல்லும்போது அவரை உரசியபடி ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது. ஆட்டோவில் 3 பேர் இருந்துள்ளனர், எங்கே போகணும் வாங்க ஆட்டோவில் போகலாம் என்று அழைத்துள்ளனர். அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த அவர், 'இல்லை நான் நடந்தே போகிறேன்' என்று கூறியுள்ளார். 'என்னய்யா நாங்க கூப்பிடுகிறோம் நீ வர மாட்டேங்கிற' என்று மிரட்டிய அவர்கள் கத்தி முனையில் ஆட்டோவில் பூபேந்தரைக் கடத்தினர்.

’என்னை எங்கே கடத்திக்கொண்டுபோகிறீர்கள், வெள்ளையா இருப்பதால் நான் பணக்காரன்னு நினைச்சுகிட்டீங்களா? நான் சாதாரண ஆள் பணக்காரன் அல்ல, கார் டிரைவர்’ என்று பூபேந்தர் உதறலுடன் கூறியிருக்கிறார்.

’உன்னைக் கடத்தி நாங்க என்ன செய்ய போகிறோம், கழுத்துல கையில இருக்கிறத எடு’ என்று கத்திமுனையில் மிரட்டி ஓடும் ஆட்டோவிலேயே பூபேந்தரிடமிருந்த 4 கிராம் தங்கச் சங்கிலி, இரண்டாயிரம் ரூபாய் ரொக்கம், ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துள்ளனர்.

பின்னர் மியூசிக் அகாடமி அருகே பாலத்தின் கீழே பாதுகாப்பாக இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பூபேந்தர் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீஸார் வழிப்பறி நபர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x