Published : 02 Jun 2018 04:42 PM
Last Updated : 02 Jun 2018 04:42 PM

தமிழிசையை வாட்ஸ் அப்பில் வசைபாடிய பெண்: பாஜக புகாரின் பேரில் கைது

பாஜக தலைவர் தமிழிசையை தரக்குறைவாகத் திட்டிக் காணொலியை வாட்ஸ் அப்பில் பதிவிட்ட பெண் மீது பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். எச்.ராஜா போன்றவர்களும் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகப் பலத்த கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் தமிழிசையைக் கண்டித்து, மிகவும் அவதூறாக திருச்சியைச் சேர்ந்த சூர்யா ஆரோ(எ) சூர்யாதேவி என்பவர் தனது முகநூலில் நேரலையில் பேசினார். இன்னொரு காணொலியில் எச்.ராஜாவையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவதூறாகப் பேசினார்.

இந்த இரண்டு காணொலிக்காட்சிகளும் வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வந்தது. இது குறித்து சென்னை மாவட்ட பாஜக சார்பில் இணை பொறுப்பாளர்கள் சங்கர், வே.காளிதாஸ் உள்ளிட்டோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். பொதுவாழ்வில் உள்ள தமிழிசையை இதுபோன்று அவதூறாகப் பேசுவதால் பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கே அச்சமான சூழ்நிலை ஏற்படும் என்று புகாரில் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தனர்.

புகாரை அடுத்து போலீஸார் சூர்யாதேவியைத் தேடி வந்தனர். இந்நிலையில் விருகம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த சூர்யாதேவியை விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். சூர்யா தேவி திருச்சியைச் சேர்ந்தவர். கணவர் மருதுபாண்டியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x