Published : 02 Jun 2018 03:42 PM
Last Updated : 02 Jun 2018 03:42 PM

சுதாகர், ராஜு மகாலிங்கம் மீதான புகார் எதிரொலி: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாகிறாரா சத்யநாராயணா?

 ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த சத்யநாராயணாவை மீண்டும் ரஜினி அழைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை பொதுமக்கள் சூப்பர் ஸ்டாராகத் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தாலும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரைவிட அதிகம் பழக்கமானவர் சத்யநாராயணா. ரஜினியின் குரலாய், மனசாட்சியாய் இருந்தவர். ரசிகர் மன்றத்தைத் திறம்பட நடத்தியவர், எந்தப் பிரச்சினையையும் ரஜினியின் காதுக்கு வராமல் திறம்பட கையாண்டு ரஜினி திரைத்துறையில் நிம்மதியாக நடிக்க உறுதுணையாக இருந்தவர் என்ற பெயர் சத்யநாராயணாவுக்கு உண்டு.

அதுமட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பது, அவர்களை அணுகுவது, அவர்களின் எண்ணப்போக்கு அனைத்தையும் அறிந்து கோஷ்டிப் பூசல் இல்லாமல் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ரசிகர் மன்றத்தை நடத்தியவர் என்ற பெருமையும் சத்யநாராயணாவிற்கு உண்டு.

ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் சத்யநாராயணாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டு காலமாக ரசிகர் மன்றங்களை நிர்வகித்து நடத்தி வந்தார். ஆனால் ரசிகர்களை ரஜினியைச் சந்திக்க விடாமல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை சிலர் ரஜினியிடம் சத்யநாராயணாவுக்கு எதிராகக் கூறினர்.

இது குறித்த கேள்விக்கு தான் என்றும் ரஜினியின் விசுவாசி, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சில ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவசரப்பட்டு அதை ரஜினியிடம் கொண்டுபோய் சேர்க்கத் துடிக்கிறார்கள்.இதில் என் தலை உருளுது. நான் எந்தக் காலத்திலும் யாருக்கும் தடையாக இருந்ததில்லை என்று கூறியிருந்தார். அவர் பேட்டி அளித்த இரண்டு மாதத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நவ 17 அன்று தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கினார் ரஜினி. அவருக்குப் பதில் தனது குடும்ப நண்பரான சுதாகர் என்பவரை ரசிகர் மன்றத் தலைவராக்கினார் ரஜினி.

அதன் பின்னர் ரஜினியிடமிருந்து சத்யநாராயணா ஒதுங்கி இருந்தார், பின்னர் அவரை மீண்டும் ரஜினி அழைத்து சேர்த்துக்கொண்டார். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் 2017-ம் ஆண்டு மே மாதம் சுதாகருக்கு கூடுதல் பொறுப்பை ரஜினி வழங்கினார். அதில் “எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும் ஒழுக்கத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் நீக்க தலைமை மன்ற நிர்வாகி விஎம் சுதாகருக்கு அதிகாரத்தை அளிக்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் 2018-ல் அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்தார். ரஜினி மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. லைகாவிலிருந்து விலகிய நிர்வாகி ராஜு மகாலிங்கம் என்பவரை தனது மக்கள் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆக்கினார் ரஜினி.

இதில் பல சலசலப்புகள் எழுந்தன. மன்றத்துக்கு சம்பந்தமே இல்லாத ராஜு மகாலிங்கத்தின் நியமனத்தை ஜீரணிக்க முடியாத நிர்வாகிகள் அதை ரஜினியிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் தவித்தனர்.

பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகள் வளர்த்த ஆரம்ப கால நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு அவரவர்களுக்கு வேண்டிய ஆட்களை நியமித்ததாக சுதாகர் மற்றும் ராஜு மகாலிங்கம் பேரில் புகாரும் எழுந்தது.

சிலர் வெளிப்படையாகவே மன்றத்துக்குள் நடக்கும் தகவல்களை ரஜினியின் காதுக்கு கொண்டுசென்றனர். மன்ற நிர்வாகிகள் பல ஆண்டுகள் மாவட்ட அளவில் பொறுப்பிலிருந்தவர்களுக்கு மக்கள் மன்றத்தில் மரியாதையான பொறுப்பை கொடுத்தால்தான் மனக்கசப்பு இல்லாமல் மன்றம் சிறப்பாக இயங்கும் என்ற கருத்து எழுந்தது.

கட்சி ஆரம்பிப்பதற்குள்ளேயே சலசலப்பா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து ரசிகர் மன்றத்தை வழிநடத்திய சத்யநாராயணா தான் மக்கள் மன்றத்தையும் வழி நடத்த முடியும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களை அறிந்து வைத்துள்ளவர் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மீண்டும் சத்யநாராயணாவை அழைத்து ரஜினி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் சத்யநாராயணாவிற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், இது சுதாகருக்கும், ராஜு மகாலிங்கத்துக்கும் சற்று பின்னடைவுதான் என்றும் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் இடையே பேச்சு அடிபடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x