Published : 02 Jun 2018 01:12 PM
Last Updated : 02 Jun 2018 01:12 PM

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அற்புதங்களையும் நிகழ்த்திவிடாது என்ற போதிலும், காவிரி நீர் குறித்த கோரிக்கைகளையும், புகார்களையும் தெரிவிக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது.

புதிய ஆணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அதன் பணிகளைக் கவனிப்பதற்கான தற்காலிகத் தலைவராக மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலோட்டமாக பார்க்கும் போது இது இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், ஆணையத்தின் அமைப்பையே மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளி தான் இது என்பது தான் உண்மையாகும்.

நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் என்பது தொழில்நுட்ப அமைப்பாகும். நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப அமைப்பு தான் சிறந்ததாகும். ஆனால், இத்தகைய அமைப்பு கர்நாடகத்திற்கு எதிரானதாக இருக்கும் என்பதால், அதை நிர்வாக அமைப்பாக மாற்ற மத்திய அரசு முயன்றது.

அதன் ஒரு கட்டமாகவே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக காவிரி மேற்பார்வை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முயன்றது. அதன் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் மத்திய அரசு தீர்மானித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு, அதன் தலைவராக நீர்வள மேலாண்மையில் வல்லமை கொண்ட மூத்த பொறியாளர் அல்லது அகில இந்திய பணி அதிகாரி ஒருவரை நியமிக்கலாம் என்று அறிவித்தது.

காவிரி மேலாண்மை ஆணையம் முறையாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்திருந்தால் மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும் நீர்ப்பாசன வல்லுநர் ஒருவரை தற்காலிகத் தலைவராக நியமித்திருக்கலாம். மாறாக, நீர்வளத்துறை செயலாளரை தற்காலிகத் தலைவராக நியமித்ததன் மூலம் அது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பதவி என்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிப்பதற்கும், ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் நீர் தேவை குறித்தும், இடர்ப்பாட்டுக் காலத்தில் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு தண்ணீரை வழங்கலாம் என்பது குறித்தும் நீர்ப்பாசன வல்லுநர்களால் தான் தீர்மானிக்க முடியும்; ஐஏஎஸ் அதிகாரிகளால் முடியாது.

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் ஒரு தலைவரையும், முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரையும் கொண்டிருக்கும். இவர்களில் 8 பேர் நீர்ப்பாசனத்துறை வல்லுநராகவும், ஒருவர் வேளாண்-பொருளாதார வல்லுநராகவும் இருப்பார்கள் என்பது தான் அந்த அமைப்பின் சிறப்பாகும்.

ஆனால், இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள மேலாண்மை ஆணையம் ஒரே ஒரு நீர்ப்பாசன வல்லுநரையும், 8 நிர்வாக அதிகாரிகளையும் கொண்டிருக்கும். 8 நிர்வாக அதிகாரிகளில் குறைந்தது 5 பேர் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பர். இதன்மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முழுக்க, முழுக்க நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பால் மாநிலங்களின் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது.

அதுமட்டுமின்றி, நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்தே காவிரி மேலாண்மை ஆணையம் பல் இல்லாத அமைப்பு என்பது தெளிவாகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஆணையம் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாது. அதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டாலும் கர்நாடகத்திற்கு எதிராக மத்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால் காவிரிப் பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துள்ளது.

எனவே, காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமித்து அதை முழுக்க முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும்; காவிரி மேலாண்மை ஆணையம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மாநிலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆணையத்திற்கே வழங்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x