Published : 02 Jun 2018 12:45 PM
Last Updated : 02 Jun 2018 12:45 PM

மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதி திறப்பு; மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதி திறக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி, 104 நாட்கள் கடந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு அரைகுறை மனதோடு வெளியிட்டிருப்பது, ஓரளவு ஆறுதலை தருவதாக இருந்தாலும், இந்த உத்தரவை பெறுவதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் நடத்திய போராட்டங்கள், விவசாயப் பெருமக்கள் ஏற்றுக் கொண்ட இழப்புகள் ஆகியவை, இந்த குறைந்தபட்ச உத்தரவாவது வெளிவரப் பெருமளவுக்கு உதவி செய்திருக்கிறது என்றே திமுக கருதுகிறது.

உச்ச நீதிமன்றம் 16.2.2018-ல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும், பொதுமக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாகவே, கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வரைவுத்திட்டம் அமைந்தது.

ஜூன் 1-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த நிலையில், இந்த இடைப்பட்ட 13 நாட்களில் மாநிலங்களில் இருந்து ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய பெயர்களையும் பெற்று, தலைவர், உறுப்பினர்கள் யார், யார் என்ற விவரத்துடன் முழுமையாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்யாமல் இறுதி வரைவுத்திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் வெளியாகியிருக்கிறது. இதுதவிர, ஏற்கெனவே 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளது.

இப்படி திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின் இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. தனியாகவும் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பும் அரசிதழில் வெளியாகவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத்திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை.

அவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ணத்தைத் தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது. ஆகவே, மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இன்னும் தெளிவின்மையையும், குழப்பத்தையும், தாமதத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுகிறது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை நடத்தி முதன்முதலில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று 5.9.1969-ல் கடிதம் எழுதியது, நடுவர் மன்றம் அமைக்க முதன்முதலில் 17.2.1970-ல் கோரிக்கை விடுத்தது, 2.6.1990 அன்று நடுவர் மன்றம் அமைத்தது, 20.7.1990-ல் முதல் விசாரணையில் பங்கேற்றது, அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றுக் கொடுத்தது.

இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 11.8.1998 அன்று வரைவுத்திட்டம் உருவாக்கி, அதற்கு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் 14.7.2000 அன்று அமைத்தது, முடங்கிக் கிடந்த காவிரி வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து 5.2.2007 அன்று நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை பெற்றது, என அனைத்துமே திமுக ஆட்சியின், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் என்பதை காவிரி டெல்டா விவசாயிகளும் தமிழக மக்களும் நன்கறிவர்.

உச்ச நீதிமன்றம் அளித்த காவிரி இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், வரைவுத்திட்டம் உருவாக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தில் திமுகவும், தோழமைக் கட்சிகளும், அனைத்துத்தரப்பு மக்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டங்கள் காவிரி நதிநீர் வரலாற்றில் சிறப்புமிக்கவை. அமைதியான அறவழிப் போராட்டங்கள் நடைபெற்ற அந்த நேரத்தில்தான், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்.

மக்கள் அமைதி காக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வேண்டுகோள் விடுத்தார். இன்றைக்கு மத்திய அரசு காவிரி வரைவுத்திட்டத்தை வெளியிடவும், இந்த குறைந்தபட்ச காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று அரசிதழ் வெளியிடவும் முன் வந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்திற்கும், எத்தனையோ முறை கால அவகாசம் கேட்டு, முரண்டு பிடித்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாமாகவே தொடர்ந்து அளித்த அழுத்தமுமே காரணமாகும்.

ஆகவே, இந்த ஆணையம் அமைக்கும் அரசிதழ் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல்நிலை வெற்றி என்றாலும், வருகின்ற ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவைப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் அது ஓரளவுக்கேனும் மனநிறைவை ஏற்படுத்தும். இல்லாவிட்டால் பெருவெற்றி என்று கொண்டாடுவதில் பொருளில்லை. கொண்டாடினால், சர்க்கரை என்று காகிதத்தில் எழுதிவைத்துக் கொண்டு, ஆகா! இனிக்கிறது, இனிக்கிறது என்று தானும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற்றுவதற்குச் சமமாகிவிடும்.

எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவிற்கு விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், மத்திய அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, தமிழக அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x