Published : 02 Jun 2018 10:01 AM
Last Updated : 02 Jun 2018 10:01 AM

திமுக தலைமையில் ஓரணியில் திரள தோழமை கட்சித் தலைவர்கள் உறுதி: பேரவையில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு; திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்து இன்று (2-ம் தேதி) முடிவு செய்வோம் என திருவாரூரில் நடந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருவாரூர் வன்மீகபுரத்தில் நேற்று மாலை வாழ்த்தரங்க பொதுக்கூட்டம் நடந்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது:

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க நாங்கள் தயார். ஆனால், அங்கே ஜனநாயக மாண்பு காக்கப்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக திமுகவின் கருத்தை பதிவு செய்வதற்காக பேசிய குறிப்புகளை, நான் பேசிவிட்டு சென்ற பிறகு அவைக் குறிப்பிலிருந்து நீக்குகின்றனர். முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கிச் சூடு பற்றியோ அல்லது 13 பேர் உயிரிழந்தது பற்றியோ குறிப்பிடப்படவில்லை. இந்தச் சூழலில்தான் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 5 நாட்களில் திமுக வெளியேற்றப்பட்டு விட்டது. இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுவிட்டால் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்வுக்கு வரவுள்ளது. இந்நிலையில், திமுகவினரை வெளியேற்றிவிட்டால் அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எளிதாக எதிர்கொள்வதற்காக ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே முதல்வர் அக்கறையோடு திமுக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

இருப்பினும், தோழமைக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதையேற்று நாளை (இன்று) சென்னையில் நடைபெறவுள்ள திமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்து, பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து நல்ல முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

கி.வீரமணி: கருணாநிதி பேச முடியாமல் மட்டுமே இருக்கிறார். இனி கருணாநிதியின் மவுனமே காரியம் சாதிக்கும். திராவிடத்தை அழித்துவிடலாம் என சிலர் எண்ணுகின்றனர். இனி யார் வந்தாலும் திராவிடத்தை அழிக்க முடியாது” என்றார்.

இரா.முத்தரசன்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்று, அதிமுக செய்கின்ற தில்லுமுல்லுகளை எடுத்துரைக்க வேண்டும். இதை தோழமைக் கட்சிகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் வலியுறுத்துகிறேன். இந்த அணி வகுப்புவாதத்தை முறியடிக்கும் சக்தியாக, ஒரு அரசியல் அணியாக மாற வேண்டும். அதற்கு திமுக தலைமை ஏற்க வேண்டும்.

திருமாவளவன்: தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க ஆற்றல் பெற்ற தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். அவரது தலைமையிலான இந்த அணி, தேர்தலுக்காக மட்டுமன்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும் ஒரு வரலாற்றுத் தேவை ஏற்பட்டுள்ளது.

கே.பாலகிருஷ்ணன்: காவி இல்லாத இந்தியா, சாவு இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும். அதற்கு மத்திய பாஜக அரசையும், அதற்கு எடுபிடி வேலை செய்யும் மாநில அரசையும் வீட்டுக்கு அனுப்ப ஓரணியாக திரள இந்த விழாவில் உறுதி ஏற்போம்.

வைகோ: திமுகவின் வெற்றிக்காக, ஸ்டாலினை முதல்வராக்க, வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வேன். அதற்கு எந்த எதிர்பார்ப்புமின்றி ஸ்டாலினுக்கு மதிமுக துணை நிற்கும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அணி 40 இடங்களையும் கைப்பற்றும்.

சு.திருநாவுக்கரசர்: அடங்காத குதிரையை அடக்குகின்ற ஆற்றல் உடைய தலைவராக விளங்கும் ஸ்டாலின் தனது எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் அடுத்து ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றத்துக்கு ஸ்டாலின் முதன்மையானவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x