Published : 02 Jun 2018 09:58 AM
Last Updated : 02 Jun 2018 09:58 AM

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எதிர்காலம் கேள்விக்குறியானதாக 4,000 ஊழியர்கள் கவலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய 1,100 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 2,900 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. அதேநேரம், இந்த ஆலையை மூட வேண்டும், விரிவாக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தூத்துக்குடி பகுதியில் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆலை தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கடந்த 28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அன்றைய தினமே ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனால் ஆலை தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றும் 4,000 நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இந்த ஆலையில் சுமார் 1,100 நிரந்தர ஊழியர்கள், அலுவலர்களும், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 2,900 தொழிலாளர்களும் பணியாற்றி வந்ததாக ஆலை தரப்பில் கூறப்படுகிறது. ஆலை மூடப்பட்டதால் இந்த 4,000 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

வேலை பறிபோகும்

நிரந்தர ஊழியர்களில் குறிப்பிட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் சிலரை மட்டும் வேதாந்தா குழுமத்தின் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்ய ஆலை தரப்பு முடிவு செய்துள்ளது. மற்றவர்கள் வெளியேற்றப்படவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை பறிபோகும்.

ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை நிர்வாகம் வழங்கியுள்ளது. மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஓரிரு தினங்களில் கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரத்தில் ஜூன் மாதம் முதல் ஊதியம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதே நிலை நீடித்தால் வேறு வேலை தேட வேண்டியதுதான். அதுவரை குடும்பத்தை நடத்துவது சிரமம் என்றார் அங்கு பணியாற்றும் நிரந்தர ஊழியர் ஒருவர்.

அச்சத்தில் தவிப்பு

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அலுவலர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 500 ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். குடியிருப்பு பகுதியில் யாரும் இல்லை. தூத்துக்குடியை சேர்ந்த சிலர் இங்கு இருந்தபோதிலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலை செய்தோம் என்பதை வெளியே சொன்னால் யாராவது தாக்கிவிடுவோர்களோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

திடீரென மூடியது வேதனை

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களின் எதிர்காலம், அவர்களது குடும்பம் என எதையுமே கணக்கில் கொள்ளாமல், திடீரென ஆலையை மூடியிருப்பது வேதனை அளிக்கிறது. எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பிறகு ஆலையை மூடியிருந்தால் பாதிப்பு வந்திருக்காது. ஆலை மூடப்பட்டதால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x