Published : 02 Jun 2018 09:57 AM
Last Updated : 02 Jun 2018 09:57 AM

ரஜினியை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன: சமக தலைவர் சரத்குமார் குற்றச்சாட்டு

‘ரஜினிகாந்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின் றன’ என அகில இந்திய சமத் துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தடியடி யில் பாதிக்கப்பட்ட மக்களை சரத்குமார் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார். தொடர்ந்து, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையைச் சேர்ந்த தமிழரசன் வீட்டுக்கு நேற்று காலை சென்ற சரத்குமார் ஆறுதல் கூறி, உதவித் தொகை வழங்கினார். பின்னர், அவர் கூறியதாவது:

மக்களிடம் சிறிதளவும் வன்முறை எண்ணம் கிடையாது. அமைதியான முறை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். வன்முறை எண் ணம் இருந்திருந்தால் குடும்பத்தோடு, குழந்தை குட்டிகளோடு வந்திருப்பார்களா? பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது. எச்சரித்து கலைத்திருக்கலாம். 100 நாட்களாக போராடிய மக்களிடம் அரசு முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் உண்மையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும்.

போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது. உணர்வுப்பூர்வமான போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். போராட்டம் நடத்துவோர் எல்லாம் சமூக விரோதிகள் என்றால், காவிரிக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா? தொழில்கள் பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார். இதில் இருந்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் உந்துதலால் அவர் செயல்படுகிறார் என்பது தெளிவா கிறது. வேலைவாய்ப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை. போராட்டம் என்பது மக்களின் உரிமை. அதனை தடுக்க முடியாது. சுதந்திர காலத்தில் இருந்தே மக்கள் போராடித்தான் பல உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x